ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்லூரி விழா
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள, ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில், 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து முன்னிலை வகித்தார். முதல்வர் தங்கவேல் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக, அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-–
கல்லூரியில் இன்று பட்டம் பெற்றுள்ள, மாணவ மாணவிகள் வாழ்க்கையில், கடுமையாக உழைத்தால், மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு உயரலாம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ படித்த மாணவன், மாதம் ரூ.1500 வேலை கிடைத்தவுடன், அதில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, இன்று, ரூ.4000 கோடி மதிப்பில் தொழில் துவங்கியுள்ளார்.
95% பேருக்கு வேலைவாய்ப்பு
சென்ற ஆண்டு, இந்தக் கல்லூரியின் வேலை வாய்ப்பு மூலமாக, 75% பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 95% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. படித்த மாணவ மாணவிகள் தங்கள் பொது அறிவையும், கல்வி அறிவையும் பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்திற்க வரவேண்டும். இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் பேசினார்.
விழாவில், அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவிகள் மாலதி, கே.வி. நித்தியசுந்தரி, மஞ்சுளா, கலைவாணி உட்பட 459 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இதில், கல்லூரி இயக்குநர்கள் கவியரசு, ஜோதிலிங்கம், கணேசன், கௌதம், கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.