நாடே வியக்கும் அறிவிப்புகள்–அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில், 15 லட்சம் செலவில், புதிதாக அமைக்கப்பட்ட, குடிநீர் தொட்டிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-–

அரசு பள்ளிகளின் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்ஐ அளவிற்கு மாற்றம் செய்ய, 9 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இல்லாத அளவிற்கு, கல்வித்துறையில் மாற்றம் செய்யப்படும். எதிர்க்கட்சிகள் பாராட்டும் அளவிற்கு, கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

3 ஆண்டுகளில், அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றம் செய்யப்படும். முதல்கட்டமாக, 2017–18–19ம் ஆண்டுகளில் 1,6,9,11ம் வகுப்பிற்கும், 2019-–20ம் ஆண்டில் 2,7,10,12ம் வகுப்பிற்கும் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும்.

10 ஆயிரம் பள்ளிகளுக்கு

நவீன கழிப்பறை

2020-–21ம் ஆண்டில் 3,4,5,8ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும். மேலும், கல்வித்தரத்தை உயர்த்த 2,472கோடி செலவில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தனியாருக்கு இணையாக அரசுப் பள்ளிகள் மாற்றம் செய்யப்படும். விளையாட்டுத் துறையில், இந்தியாவிற்கு முன்னோடியாக திகழும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், 10 ஆயிரம் பள்ளிகளுக்கு நவீன கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும். 2 ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜரின் நினைவாக 15ம் தேதி, அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக, சட்டசபையின் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

விழாவில், முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்து ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் சிறுவலூர் மனோகரன், தம்பி (எ) சுப்ரமணி, முன்னாள் எம்பி கே.கே.காளியப்பன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் கே.கே.கந்தவேல். முருகன், கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு விற்பனைச்சங்கத்தலைவர் காளியப்பன், நகராட்சி ஆணையாளர் பழனிவேல், நகராட்சி பொறியாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *