திருப்பூரில் நடமாடும் நூலக வாகன சேவை
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது நூலகத்துறையின் சார்பில் இயங்கி வரும் நடமாடும் நூலக வாகனத்தின் சேவையினை, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக, கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் சார்பில், மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம், கோவில்வழி, ராக்கியாபாளையம், விஜயாபுரம், முத்தணம்பாளையம், நல்லூர், முதலிபாளையம், காசிபாளையம், பொன்நகர், அலகுமலை, தேவராயன்பாளையம், அரசுகாலனி, கண்டியன்கோயில், பெருந்தொழுவு, வேலாயுதம்பாளையம், புத்தரசல், அம்மாபாளையம், தொட்டம்பட்டி, திருமலைநாயக்கன் பாளையம், அமராவதிபாளையம், அவிநாசிபாளையம், காட்டூர், நவகொம்பு, வஞ்சிபாளையம், வேங்கிபாளையம், வடக்குத் தோட்டம், ஜோதியம்பட்டி, செம்மபாளையம், பொக்கம்பாளையம், செட்டிபாளையம், மின்நகர், ராசாக்கவுண்டன்பாளையம், காளிவேலம்பட்டி, 63 வேலம்பாளையம், புமலூர், சாமிகவுண்டம்பாளையம், காரணம்பேட்டை, கோடாங்கிபாளையம், சங்கோத்தி பாளையம், உகாயனூர், அல்லாலபுரம், குள்ளம்பாளையம், வட்டமலை, செங்கோடம்பாளையம், சமத்துவபுரம், அப்பியாபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு, நடமாடும் புத்தக கண்காட்சி வாகனம் செல்கிறது.
இதனை, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தலா ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.
நடமாடும் புத்தக கண்காட்சி வாகனத்தை, கலெக்டர் துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட நூலக அலுவலர் ந.மணிகண்டன், முதல்நிலை நூலகர், பெ.கார்த்திகேயன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.