உதகையில் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு,
நீலகிரி மாவட்டம், உதகை அரசு பாலிடெக்னி்க் கல்லூரியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட, தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது,
ஒவ்வொரு மாணவரும், தங்களின் திறமைகளை காலத்திற்கேற்ப ஆர்வத்துடன் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசு இதற்காக தான், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவற்றில் ஒன்று தான், வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலப் பணிவாழ்வு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நடத்தப்படுவது ஆகும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாணவர்களும், இளைஞர்களும் தம்மை மாற்றிக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு வழிகாட்டுவதே இதன் நோக்கமாகும். இளைஞர்களுக்கு அனைத்து பயிற்சிகளையும், ஊக்கதொகையும் அரசு வழங்கி வருகிறது.
சான்றிதழ் மட்டும் போதாது
நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்கில், ஒரு பிரத்யேக தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகமே இயங்கி வருகிறது. ஒவ்வொரு தனி நபர்களுக்கும் கல்வி சான்றிதழ் மட்டும் போதாது. நாம் வேலை தேடி செல்லும் பொழுது, எந்த தொழிற்சாலைக்கு சென்றாலும், அந்த தொழிற்சாலையின் தேவையை அறிந்து, அதற்கேற்றால் போல் நாம் மாறிக் கொள்ள வேண்டும்.
தங்களின் திறமைகளை மேம்படுத்த வேண்டும். வேலை பெறுவதற்கான வழிமுறையினை சிந்தித்து அந்த வேலையை அடைய வேண்டும் என்பதற்காக அனைத்து உதவிகளையும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பினை மாணவர்களும், இளைஞர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.