தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மீன்வளர்ப்போர் தினம்
தேசிய மீன்வளர்ப்போர் தினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10.7.2017 அன்று கொண்டாடப்பட்டது.
தேசிய மீன்வளர்ப்போர் தினமானது வருடந்தோறும் ஜீலை மாதம் 10ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய கெண்டைமீன்களில் தூண்டும் முறை இனப்பெருக்க தொழில்நுட்பத்தை கண்டறிந்த விஞ்ஞானிகளான பேராசிரியர்கள் ஹிராலால் சௌத்ரி மற்றும் அலிகுன்கி ஆகியோரின் நினைவாக தேசிய மீன்வளர்ப்போர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமானது மீன்வளர்ப்போரிடையில் நன்னீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உற்பத்தியில் உள்ள தற்போதைய நிலையைவிட மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க செய்வதற்காகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 36 பண்ணையாளர்கள் மீன்வளத் தொழில் முனைவோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பல்துறைத்தலைவர், மீன்வளத் தகவல் மற்றும் சமூக அறிவியல் பள்ளி முனைவர்.இரா.சாந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர்.அ.சீனிவாசன் , நமது நாட்டில் உள்ள மீன்வளர்ப்பிற்கான நீாவள ஆதாரங்களின் இருப்பளவு, நன்னீர் மீன்வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் உற்பத்தி குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் தலைமையுரை ஆற்றினார். மீன்வளர்ப்புப் பள்ளியின் பல்துறைத் தலைவர் பொறுப்பு, முனைவர்.ப.அகிலன், தமது வாழ்த்துரையில் தூண்டுதல் முறை இனப்பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் பண்ணையாளர்கள் அத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொண்டார்.
இறுதியாக மீன்வள விரிவாக்கத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர்.க.வீரபத்ரன் நன்றியைுரை ஆற்றினார். துவக்க விழா நிகழ்வைத் தொடர்ந்து, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வல்லுனர்கள், அலங்கார மீன்வளர்ப்பில் தற்போதைய வளர்ந்து வரும் நிலை, மீன் உணவின் தரம், மீன்வளர்ப்பில் நீர்த்தர மேலாண்மை மற்றும் மீன்வளர்ப்பில் உள்ள முக்கிய நோய்கள் மற்றும் அதன் மேலாண்மை போன்ற நான்கு முக்கிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கவுரை ஆற்றினார்கள். இறுதியாக பண்ணையாளர்களிடமிருந்து நிகழச்ச்சியின் பயன்குறித்த கருத்துக்கள் கேட்டு பெறப்பட்டன.