சிவகங்கை அரண்மனைவாசலில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வுப் பேரணி
சிவகங்கை அரண்மனைவாசலில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வுப் பேரணியைமாவட்ட கலெக்டர் சு.மலர்விழி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் செவிலியர்கள் கல்லூரி மாணவியர்கள் “நாம் இருவர் நமக்கு இருவர்”, “குடும்ப நலம் நாட்டு நலம்”, “இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்”, “சிறு குடும்பம் சீரான குடும்பம்”, “பெண்ணின் நலன் நாட்டின் நலன்”, “இரண்டு குழந்தைகளுக்கு மூன்றாண்டு இடைவெளி தேவை”, “பெண் சிசுவை காப்பாற்றுவோம்” போன்ற பதாகைகளை ஏந்தி அரண்மனைவாசலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.விஜயன் மதமடக்கி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.யசோதாமணி, துணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவம், ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் மரு.இராமபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.