பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியை பரிசீலனை செய்ய வேண்டுகோள்
பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி 18 சதவீத வரியை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரை பழைய பிளாஸ்டிக் வணிகர்கள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள புஷ்பவள்ளி திருமண மண்டபத்தில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஜி.எஸ்.டி 18 சதவீத வரி விதித்தது குறித்த விளக்க கூட்டம் மதுரை பிளாஸ்டிக் வணிகர்கள் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைப்பின் செயலாளர் செல்வம் பேசியதாவது:-
பழைய பிளாஸ்டிக் தொழிலில் சிறு தொழிலாளி வீடுகளில் உள்ள குப்பைகளையும் ரோடுகளில் உள்ள குப்பைகளையும் சேகரித்து சிறு கடை வணிகரிடம் கொடுக்கிறார்கள். அவர், அதை வாங்கி மறுசுழற்சி செய்யும் சிறு தொழிற்சாலை மற்றும் டிரேடிங் செய்பவர்களுக்கு கொடுக்கின்றனர். தற்போது ஜி.எஸ்.டி 18 சதவீதம் அதிக வரி விதிப்பால் மறுசுழற்சி மற்றும் டிரேடிங் செய்யும் வணிகர்கள் வாங்கும் விலையை குறைத்துள்ளனர். ஆதலால் சிறு தொழிலாளர்கள் வீடுகளிலும் ரோடுகளிலும் உள்ள குப்பைகளை சேகரித்து கொண்டு வரும் போது அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அடிப்படை சம்பளம் கூட கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலை தேட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 300 மறுசுழற்சி செய்பவர்களுக்கு போதிய பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களிடம் வேலைக்கு உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. மதுரையில் சுற்றுப்புற சூழல் பாதிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி 18 சதவீத வரியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு செல்வம் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.