ஆதார் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
பல்வேறு சமூக நல திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆதார் எண் முதலில் கொண்டு வந்த போது, நாட்டில் நடைபெற்று வரும் குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்ககளை மத்திய அரசு கூறியது. சமூக நல திட்டங்களுக்கு இது கட்டாயமாக்கப்படாது என்று முதலில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் படிப்படியாக பல்வேறு அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இதனால், கேஸ், ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல், ஆதார் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், பல்வேறு சமூக நல திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகளை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்குகளை ஜூலை 18, 19 தேதிகளில் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி செல்லமேஸ்வரர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.