600 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சூட்டிங் ரேஞ்சில் நாளை (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை ரைபிள் கிளப் சார்பில் 43-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சூட்டிங் ரேஞ்சில் நாளை (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. தினசரி போட்டிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இன்று (புதன்கிழமை) வீரர்-வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவில் இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 90 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த நிவேதா, காயத்ரி, சர்வேஷ் ஸ்வாரூப் சங்கர், அஜய் நிதிஷ், சந்தியா மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்ட கிளப்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 600 பேர் கலந்து கொள்கிறார்கள்.
10 மீட்டர், 25 மீட்டர், 30 மீட்டர், 50 மீட்டர் தூர பந்தயங்கள் இரு பிரிவிலும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தேசிய ரைபிள் சங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி புள்ளியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஜி.வி.மவ்லாங்கர் அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் தென்னிந்திய போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தகவலை சென்னை ரைபிள் கிளப் செயலாளர் டி.வி.சீத்தாராமராவ், பொருளாளர் ஆர்.ரவிகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.