100Mbps வேகத்தில் 300 ஜிபி இலவச டேட்டா: அசத்தும் ஜியோ ஃபைபர் திட்டங்கள்
4ஜி சேவைகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் மூலம் பிராட்பேண்ட் இண்டர்நெட் வழங்க இருக்கிறது. அதன்படி ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்கள் தவறுதலாக அந்நிறுவன இணையதளத்தில் கசிந்துள்ளது.
100Mbps வேகத்தில் 300 ஜிபி இலவச டேட்டா: அசத்தும் ஜியோ ஃபைபர் திட்டங்கள்
மும்பை:
இந்திய டெலிகாம் சந்தையில் மலிவு விலை சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ ஃபைபர் சேவையை வழங்க தயாராகி விட்டது. சில பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஜியோ ஃபைபர் சேவையில் வழங்கப்பட இருக்கும் சலுகை திட்டங்கள் ஜியோ அதிகாரப்பூர்வ தளத்தில் தவறுதலாக பதிவு செய்யப்பட்டது.
ஜியோ ஃபைபர் பிரீவியூ திட்டத்தின் படி வாடிக்கையாளர்களுக்கு நொடிக்கு 100 எம்பி வேகத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் இன்ஸ்டாலேஷன் கட்டணம் (திரும்ப வழங்கப்படும் செக்யூரிட்டி டெபாசிட்) ரூ.4,500 செலுத்த வேண்டும்.
இதே போன்ற சலுகைகள் மற்றும் கட்டணம் சார்ந்த தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாதம் 100 ஜிபி பயன்படுத்தியதும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாக குறைக்கப்படும்.
ஜியோ ஃபைபர் பிரீவியூ திட்டம் ரெடிட்டர் ஒருவர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் பிரீவியூ திட்டத்தை தவிர ஜியோ ஃபைபர் முதற்கட்டமாக ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, சூரத், வதோதரா மற்றும் விசாகபட்டிணம் உள்ளிட்ட இடங்களில் துவங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஜியோ கஸ்டம் ரவுட்டர் ஒன்றையும் வழங்கும் என்றும், இதற்கான கட்டணம் இன்ஸ்டாலேஷன் பணத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜியோ நெட்வொர்க்கை எனது கட்டிடம் முழுக்க விரிவாக்கம் செய்ய வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் கூடுதல் ரவுட்டர்களையும் ஜியோ பொருத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஜியோ ஃபைபர் சேவைகள் மும்பை மற்றும் பூனே பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு, சில வாடிக்கையாளர்கள் தங்களது இண்டர்நெட் வேகம் நொடிக்கு 70 முதல் 100 எம்பி வரை இருந்ததாக தெரிவித்தனர். ஜியோ அறிமுக சலுகையை போன்றே ஜியோ ஃபைபர் திட்டமும் பிரீவியூ முறையில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.