மாட்டு இறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கும் பிரச்சினையில், மத்திய அரசின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை செய்து கடந்த மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்காக மாடு வாங்கல், விற்றலை ஒழுங்கு படுத்தி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், சிறுபான்மையினரின் உரிமை மற்றும் உணவு உண்பவர்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிராக மதுரையை சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவை ரத்துசெய்யக்கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அதே நேரத்தில் மத்திய அரசின் கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதிகளை ரத்து செய்யக்கோரி ஐதராபாத்தை சேர்ந்த அப்துல் பகீம் குரேஷி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் தன்னுடைய வாதத்தில் கூறும்போது, அரசாங்கத்தின் இந்த விதிமுறை விவசாயிகளை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது. சான்றிதழ் பெற்றுத்தான் மாடுகளை விற்கவோ வாங்கவோ முடியும் என்ற நிலை நடைமுறையில் சாத்தியம் அற்றது. இதனால் விவசாயிகளும் மாட்டு வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசின் அறிவிக்கையை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா தன்னுடைய வாதத்தில், கால்நடைகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாக கொண்டுதான் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது, இந்த விதிமுறைகள் தொடர்பாக பல்வேறு எதிர் கருத்துகள் வந்து இருப்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது மறுபரிசீலனை செய்து அந்த விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை மத்திய அரசின் அறிவிக்கைக்கு முழுவதுமாக தடை விதித்துள்ளது. அதனால் இதுவரை இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரவில்லை. அந்த தடையை விலக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் தற்போதைக்கு நாங்கள் கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அதே நேரத்தில் இந்த விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முன் வந்திருப்பதால், அரசு பிறப்பித்த அரசாணையை முற்றாக ரத்து செய்வதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், மத்திய அரசு யாரையும் பாதிக்காத வகையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடுவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும். மறு அறிவிக்கைக்கு பிறகு அதனை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு அனைவருக்கும் போதிய அவகாசம் வழங்க வேண்டும். கடந்த மே மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை விதித்து உள்ள தடை தொடரும் என்றும் இந்த தடை நாடு முழுவதும் பரவலாக அமலில் இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் மத்திய அரசு புதிய அரசாணை வெளியிடும் வரை கால்நடை சந்தைகள் தொடர்பாக முன்னர் நடைமுறையில் இருந்த விதிமுறைகளே தொடரும்.
இதன் மூலம் கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.