தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுக்கு ஜாகிர்கான்: பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகிர்கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் ஐந்து பேருடன் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு நேற்று நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவரான கங்குலி, ‘எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய அணி கேப்டனுடன் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது’ என்று கூறியிருந்தார். இதனால், பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு மேலும் தாமதமாகும் என தகவல் வெளியானது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு, இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டது.
எனவே, இதுகுறித்து பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி, பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுதரி ஆகியோரிடம் வினோத் ராய், பேசியதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும், ஜாகிர்கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை வரை இருவரும் அப்பதவியில் நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் ராகுல் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *