மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம்: 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது
”உண்மையே கடவுள்’ என்ற மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம் 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. தனது வாழ்நாளில் இந்த ஓவியத்துக்குதான் அவர் வெகுநேரம் அமர்ந்து ’போஸ்’ கொடுத்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
1931-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி லண்டன் நகருக்கு சென்றிருந்தார். நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்லி ஹால் என்ற இடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரை ஒவியமாக தீட்ட ஜான் ஹென்றி ஆம்ஷெவிட்ஸ் என்பவர் விருப்பப்பட்டார். பொதுவாக, ஓவியங்கள் வரைவதற்காக வெகுநேரம் வரை ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும் என்பதால் தன்னை சிலர் ஓவியமாக வரைய முன்வந்த வேளைகளில் காந்திஜி அதை பவ்யமாக தவிர்த்து வந்திருந்தார்.
ஆனால், அவரை லண்டனுக்கு வரவழைத்த நண்பரின் அன்பு வேண்டுகோளை ஏற்ற காந்தி, ஒரு ஓவியத்துக்கு அமர்ந்து ‘போஸ்’ கொடுக்க சம்மதித்தார். இதை தொடர்ந்து ஜான் ஹென்றி ஆம்ஷெவிட்ஸ் அவரை அமர வைத்து பென்சிலால் ஓவியமாக வடித்தார்.
இந்த ஓவியத்தில் மகாத்மா காந்தி கடந்த 4.12.1931 அன்று கையொப்பமிட்டார். கையொப்பத்துடன் ‘வாய்மையே கடவுள்’ என்னும் பொன்மொழியையும் தனது கைப்பட அவர் எழுதினார்.
மிகவும் அரிதான இந்த ஓவியத்தை பாதுகாத்து வைத்திருந்தவர் அதை ஏலத்தில் விட தீர்மானித்தார். இதையடுத்து, லண்டன் நகரில் உள்ள பிரபல ’சோத்பைஸ்’ ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விடும் உரிமையை பெற்றது. இந்த பென்சில் ஓவியம் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பவுண்டுகள்வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய இந்த அரிய ஓவியம் 32 ஆயிரத்து 500 (இந்திய மதிப்புக்கு சுமார் 27 லட்சம் ரூபாய்) பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இதேபோல், இந்திய விடுதலைக்காக போராடிய வங்காளி சரத் சந்தர் குடும்பத்தாருக்கு காந்தி எழுதிய கடிதங்களும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 37 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது, குறிப்பிடத்தக்கது.