உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி – மதுரை சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வடுகபட்டி கிராமம், திருச்சி – -மதுரை மெயின் ரோடு, பொம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகில் 10.7.2017 அன்று திருச்சியிலிருந்து விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த காரும் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் சபிபுல்லா, சம்சதீன் என்பவரின் மகன் முகமது காதர் மற்றும் அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது காசீம் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த விபத்தில் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்த மடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 -ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *