ஜல்லிக்கட்டு மாடுகளை காக்க சிவகங்கையில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்

ஜல்லிக்கட்டு மாடுகளை காக்க சிவகங்கையில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி அறிவித்தார்.
சட்டசபையில் கால்நடைத்துறை மானிய கோரிக்கையின்போது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அத்துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வருவாயைப் பெருக்கும் விதமாகவும், அவர்களுக்கு தொடர் வாழ்வாதாரம் கிடைக்க வகை செய்யும் வகையிலும், மக்களுக்கு போதிய புரதச் சத்து கிடைக்கச் செய்யவும், ஜெயலலிதாவின் நல்லாசியுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆணையின்படி புழக்கடை கோழி அபிவிருத்தித் திட்டம் 6.47 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படும்.
மானாவாரி நிலங்களில் பராமரிக்கப்படும் கலப்பின கால்நடைகளின் உற்பத்தி மற்றும் கருவுறும் திறனை அதிகரிக்க 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்தின்மூலம் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து, தாது உப்புக் கலவை மற்றும் மருந்துகள் சினையுறா மாட்டினங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் அதிக உற்பத்தித் திறனுள்ள பசுவினங்கள் விற்கப்படுவது தவிர்க்கப்படும்.
100 சிறு கால்நடை
பால் பண்ணைகள்
வணிக ரீதியிலான கறவை மாடு வளர்ப்பு கிராமப்புறங்களில் கால்நடை விவசாயிகளுக்கு தொடர் வருமானம் ஈட்டி, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய தொழிலாக உருவெடுத்துள்ளது. தரமான கறவை மாடுகளின் சந்தை விலை அதிகரித்துள்ளதாலும், இத்தொழிலுக்குத் தேவைப்படும் உள்ளீடுகளான கொட்டகை முதலிய வசதிகளுக்கான முதலீடு அதிகரித்துள்ளதாலும், கிராமப்புறங்களில் பாரம்பரிய கறவை மாடு வளர்ப்பு முறைகளையே விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். பண்ணைமுறை கறவை மாடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறியும் பொருட்டு, அவர்களுக்கு வணிக ரீதியிலான கறவை மாடு வளர்ப்பில் தீவிர பயிற்சி அளித்து, இத்தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டு மாநிலத்தில் உள்ள 100 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு முதல் பத்து பசுக்கள் அல்லது எருமைகளைக் கொண்ட அலகு ஒன்றுக்கு தமிழக அரசின் 25 விழுக்காடு மானியமாக 1.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, 100 சிறு கால்நடைப் பால் பண்ணை அலகுகள் 1.25 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
நாட்டினக் கோழி குஞ்சுகள் தடையின்றி கிடைத்திட வகை செய்யும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாவட்டக் கால்நடைப் பண்ணையில் நாட்டினக் கோழிப் பெருக்க வளாகம் 6.75 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்படும். சமீப காலமாக, மக்களிடையே நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபாடு காணப்படுகிறது. ஆனால், தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாத நிலையே இருந்து வருகிறது. இந்நிலையை சரி செய்யும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக் கோழிக் குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்படும். இதன்மூலம், நாட்டுக் கோழிக் குஞ்சுகளின் தேவை ஈடு செய்யப்படும்.
ஓசூரில் பசுந்தீவன சாகுபடி
ஓசூரில் உள்ள மாவட்டக் கால்நடைப் பண்ணையில் பசுந்தீவன உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த 3.51 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் ஓசூர் மாவட்டக் கால்நடைப் பண்ணையில் புதிதாக பசுந்தீவன சாகுபடி மேற்கொள்ளப்படும். இதற்குத் தேவைப்படும் நீர் ஆதாரங்கள் மற்றும் பாசன வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் வருடத்திற்கு 7000 மெட்ரிக் டன் பசுந்தீவனம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் அவற்றின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே முதலுதவி மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் ஆகியன கிடைக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை தொடர்ந்து தொலைதூர குக்கிராமங்களிலும் கால்நடை கிளைநிலையங்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமுள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 100 புதிய கால்நடை கிளைநிலையங்கள் 2.90 கோடி ரூபாயில் தோற்றுவிக்கப்படும்.
பசுந்தீவன உற்பத்தி ஊக்குவிப்பு
மண் இல்லாமல் குறைந்த நீரில் குறைந்த இடத்தில் 8 நாட்களில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 1,100 கால்நடை வளர்ப்போருக்கு 75 விழுக்காடு மானியத்தில் இடு பொருட்கள் வழங்கப்படும். மீதமுள்ள 25 விழுக்காடு பயனாளிகளிடமிருந்து பெறப்படும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 16,000 மெ.டன் பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும்.
இத்துறையின் நான்கு மாவட்ட கால்நடைப் பண்ணைகளில், வறட்சிக் காலங்களில் தீவனப் பற்றாக்குறையினைப் பூர்த்தி செய்வதற்கும், புரதச்சத்து மிக்க பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்கிடவும், 600 ஏக்கர் பரப்பளவில் சுமார் இரண்டு இலட்சம் பசுந்தீவன மரங்களும் அதனூடாக புரதச் சத்து மிக்க தீவனப் புற்களும் வளர்க்கும் மாதிரி அலகு 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் ஆண்டிற்கு 15,000 மெ.டன் பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும்.
வெண்பன்றி வளர்ப்பு
ஊக்குவிப்பு
சமீப காலங்களில் பன்றி இறைச்சியின் தேவை நகரங்கள் மற்றும் மாநகரங்களிலும் அதிகரித்து வருகின்றது. வெண் பன்றி வளர்ப்பில் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த உள்ளீட்டில் அதிக லாபம் ஈட்டுவதால் வெண் பன்றி வளர்ப்பு தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குகிறது. இறைச்சிக்காகவும், இனப்பெருக்கப் பயன் பாட்டிற்காகவும் வெண்பன்றி வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் தரமான வெண் பன்றிக் குட்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஓசூர் மாவட்ட கால்நடைப் பண்ணையின் பன்றிப் பிரிவு வலுப்படுத்தப்படும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களினால் விவசாயிகளுக்கு உண்டாகும் இழப்பினைத் தவிர்க்கவும், நவீன நோய் கண்டறியும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கால்நடைகளின் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கவும், நோய் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பெரம்பலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் தோற்றுவிக்கப்படும்.
செயற்கைமுறை கருவூட்டல் நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் 870 கருவூட்டல் நிலையங்களுக்கு திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் இதர உபகரணங்களும் புதியதாக வழங்க 2 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும் 1.60 கோடி ரூபாய் செலவில் 200 கிராமப்புற இளைஞர்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி மற்றும் அதன் இடு பொருட்கள் வழங்கப்படும்
செயற்கைமுறை கருவூட்டல் வசதியை கால்நடை வளர்ப்போரின் வசிப்பிடங்களிலேயே அளிக்கும் வகையில் 200 கிராமப்புற இளைஞர்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ள பயிற்சி மற்றும் செயற்கைமுறை கருவூட்டலுக்கான இடுபொருட்கள் வழங்கப்படும். இதனால் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் அதிக எண்ணிக்கையில் பசுவினங்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் வழங்க வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 200 புதிய செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை இப்பணி மேற்கொள்ளப்படாத குக்கிராமங்களுக்கும் செயற்கைமுறை கருவூட்டல் வசதி ஏற்படுத்த ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை மாவட்ட கால்நடைப் பண்ணையில் பாரம்பரிய உம்பளாச்சேரி மாட்டினம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பண்ணையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன்மூலம் சிறந்த பராமரிப்பு முறைகள் கடைபிடிக்க வழிவகுக்கப்படும். இதனால் கன்று பிறப்பு விகிதம் அதிகரிக்கப்படுவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு கன்றுகள் வழங்கப்படும். மாவட்ட கால்நடைப் பண்ணை, கொருக்கையில் தீவன உற்பத்தியை அதிகரிக்க நவீன நீர்பாசன வசதிகளை ஏற்படுத்த 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் பணிகள் கள அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேற்படி அலுவலர்கள் கள ஆய்வுகளை சிரமமின்றி மேற்கொள்ள, இத்துறையின் கள அலுவலர்களுக்கு 25 புதிய வாகனங்கள் நடப்பு நிதியாண்டில் 1.75 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
கால்நடை பராமரிப்புத்துறையில் 31 மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் 15 அலுவலகங்களில் நிர்வாக அலுவலர் பதவிகளும், 16 அலுவலகங்களில் அலுவலக மேலாளர் பதவிகளும் உள்ளன. மண்டல இணை இயக்குநர் மாவட்டம் முழுமைக்கும் தொழில்நுட்ப மேற்பார்வை அலுவலர் என்பதால் நிர்வாக அலுவலர் துறை திட்டங்களின் பணப்பரிமாற்றங்கள், நிறுவன பணிகள், ஊதியம் மற்றும் படிகள் பெற்று வழங்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர். எனவே, கால்நடை பராமரிப்புத்துறையில் நிர்வாக அலுவலர் பதவி இல்லாத 16 மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களில் உள்ள மேலாளர் பதவிகள் ஆணையின்படி 4.32 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் நிர்வாக அலுவலர் பதவிகளாக தரம் உயர்த்தப்படும்.
வகை சாரா நாட்டின பசுக்களின் மரபு தன்மையை உயர்த்த செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் மாட்டு கொட்டகையை பலப்படுத்தி 50 எண்ணிக்கை தார்பார்கர் இன பசுக்களை கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிவகங்கையில் புலிக்குளம்
மாட்டின ஆராய்ச்சி நிலையம்
தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் புலிக்குளம் மாட்டினங்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. இம்மாட்டினம் தற்போது பெரும்பாலும், சிவகங்கை, தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. புலிக்குளம் மாட்டினத்தை அழிவிலிருந்து காத்திடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும்.
காங்கேயம் மாட்டினத்தைப் பேணிக்காத்து அதன் சந்ததிகளை பெருக்குவதற்காக, காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
2015-–16ம் ஆண்டு முன்னோடித் திட்டமாக திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டு தற்போது இயங்கி வரும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் சேவையை 2017–18ம் ஆண்டிலும் தொடர கூடுதல் நிதியாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *