நார்தாமலை காட்டில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை
நார்தாமலை காட்டில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க அரசு உரிய நட வடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். நார்தாமலை காட்டில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா? என்றார்.
அதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளிக்கையில், நார்தாமலை காட்டில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த காப்பு காட்டில் மான், மயில், நரி, உடும்பு, மலை பாம்பு போன்ற விலங்குகள் உள்ளன. அதேபோல் அங்கு சிறு, சிறு குட்டைகள் காணப்படுகிறது. அந்த குட்டைகள் மூலம் போதுமான தண்ணீரும் உள்ளது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவை கிடைப்பதால், அவை காட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கின்றன. வன பணியாளர்களை கொண்டும் சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.
அதை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் எம். ராமசந்திரன் கூறும்போது, நார்தாமலை என்பது புகழ் பெற்ற கோவில் கொண்ட இடம் ஆகும். அங்கு ஒரு மாத காலம் திருவிழா நடைபெறும். அங்கு அச்சுறுத்தல் இல்லாத வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அந்த விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வன விலங்குகளை பாதுகாத்து வருகிறது என்றார்.
அதை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் மஸ்தான் துணை கேள்வி எழுப்பினார். செஞ்சி காப்புக்காட்டு பகுதியில், பச்சையம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி மாதத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வனத்துறையினர் சில நேரங்களில் அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். எனவே பக்தர்கள் தடையில்லாமல் கோவிலுக்கு செல்ல அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், கோவில் திருவிழாவில் தடையில்லாமல் பக்தர்கள் சென்று வர வனத்துறை யினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்.