சேலத்தில் 11 கலைஞர்கள் அரசு விருதுக்கு தேர்வு

சேலம் கலெக்டர் கூட்டரங்கில், கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு, அரசு விருது வழங்கும் தேர்வு கூட்டம், கலெக்டர் வா.சம்பத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கலெக்டர் தெரிவித்ததாவது:–
தமிழ்நாட்டில் கலைப்பண்புகளை மேம்படுத்தும் நோக்கில், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில், மாவட்ட கலை மன்றங்கள் வாயிலாக, கலைத்துறையில் சாதனைப்படைத்த 18 வயது அதற்குட்பட்டோருக்கு “ கலை இளமணி”, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு “கலை வளர்மணி”, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு “கலை சுடர்மணி”, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு “கலை நன்மணி” 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு “கலை முதுமணி” என வயதுக்கு தக்கவாறு விருதுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதில், தேர்வு செய்ய கலெக்டர் தலைவராகவும், உதவி இயக்குநர் கலைப்பண்பாட்டுத்துறை செயலராகவும், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இசைப்பள்ளி தலைமையாசிரியர், அரசு சாரா கலைஞர் என அரசால் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுக்கான விருதுகள், தேர்வு குழுவால், தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, வழங்கப்படவுள்ளது.
11 கலைஞர்கள் தேர்வு
இதில், கலை முதுமணி விருதுக்கு அம்மாபேட்டை எம்.தர்மலிங்கம், இசை நாடக நடிகை கிச்சிபாளையம் பி.சரஸ்வதியும், கலை நன்மணி விருதுக்கு மல்லூர் இரா.நடராஜன், நாதஸ்வரக்கலைஞர் மேச்சேரி எம்.எஸ்.முருகேசனும், கலைச்சுடர்மணி விருதுக்கு தபேலா கலைஞர் கிச்சிபாளையம் சா.பைரோஸ்கான், தவில் கலைஞர் எடப்பாடி அ.வேணுகோபாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலை வளர்மணி விருதுக்கு, பரதநாட்டியக் கலைஞர் தி.அபர்ணா, காவடியாட்டக்கலைஞர் வாழப்பாடி சி.ஆசைத்தம்பியும், கலை இளமணி விருது செ.ஸ்ரீநிதி,செ.ஹரிணி (குரலிசை), ந.லட்சுமி சாரதா (வீணை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சரால் அரசின் விருது வழங்கப்படவுள்ளது. கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில், உதவி இயக்குநர் பா.ஹேமநாதன், விருதாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், முதன்மைக் கல்வி அலுலவரின் நேர்முக உதவியாளர் இரா.அசோகன், எஸ்.சவுண்டப்பன், ஏ.வி.ஆர்.சுகந்தி சுதர்சனம், சு.சங்கரராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *