வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி
கோவை வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மாணவ மாணவிகள் பங்கேற்ற, ஓவியப்போட்டி நடைபெற்றது.
வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில், சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில், உலக மக்கள் தொகை நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் சசிகுமார் சாம்ராஜ் தலைமை தாங்கினார். மாணவன் முகம்மது அஸ்லாம் வரவேற்று பேசினார். 7 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் அக்னி, பிரித்வி, பிரம்மோஷ் மற்றும் திரிசூல் என 4 அணிகளாக பிரிக்கப்பட்டனர். மக்கள் தொகை அதிகரிப்பது நன்மையா? தீமையா என்ற தலைப்பில், இந்த 4 குழு மாணவர்களுக்கும், பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
பட்டிமன்ற நடுவராக சமூக அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி கலந்து கொண்டார். மேலும், 5,6ம் வகுப்பு மாணாக்கருக்கு, இதே தலைப்பில், ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்கள், பல மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த, முக்கிய தகவல்களை வழங்கினர். இறுதியில், மாணவன் நன்றி கூறினார்.