கோவையில் கருவூலக்கணக்குத்துறை செயலர் ஆய்வு

தமிழ்நாடு அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகளை, கணினிமயமாக்கல் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள, தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, ரூ.288.91 கோடி நிதியை, அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக, ஒரு தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள, சுமார் 2,20,00-க்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும்.

இத்திட்டத்தில், அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற, வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அரசின் நிகழ்நேர வரவினை, உடனுக்குடன் அறிய இயலும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் நிதி நிலை விபரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதமும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும்.

செப்டம்பருக்-குள் பணி நிறைவு

முதற்கட்டமாக, கடந்த ஆண்டு நவம்பர் சென்னை, ஈரோடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிப்பதிவேடு கனிணிமயமாக்கல் தொடங்கப்பட்டு, ஏப்ரல்- முதல் இதர மாவட்டங்களிலும் பணிவிரிவாக்கம் செய்யப்பட்டு, வருகின்ற செப்டம்பருக்-குள் இப்பணியினை முடித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், பணிப்பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியிலிருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின், ஆக்கபூர்வப் பணிகளில் ஈடுபட முடியும். இதனால், பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் காலவிரயம் குறைவதோடு, பணிப்பதிவேடு காணாமல் போக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும்.

பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால், நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு, ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும்.

ஆதாரப் பூர்வமான பணிவிபரங்கள் கணினியில் இருப்பதனால், பணிமாற்ற முடிவுகள், தாமதமின்றி முறையாக எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம், கோவை மாவட்டத்தில் உள்ள 33907 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும்.

கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரன், மகாபாரதி, கருவூல கணக்குத் துறையின் கூடுதல் இயக்குநர் செல்வசேகரன், மண்டல இணை இயக்குநர் கோவை நடராஜன், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் அனைத்து அரசுத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *