தருமபுரியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
கால்நடை மருத்துவ சேவை, எளிதில் கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி, கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்திட, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் 112 கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முகாமில், 314 கால்நடைகளுக்கு சிகிச்சைப் பணிகளும், 757 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 30 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டலும் மேற்கொள்ளப்பட்டது.
முகாமின் சிறப்பம்சமாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி மூலம், 39 கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை மற்றும் 22 கால்நடைகளுக்கு, மலடு நீக்கச் சிகிச்சைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில், கால்நடை வளர்ப்போருக்கு, வறட்சி காலத்தில் பசுந்தீவனப் பற்றாக் குறையைப் போக்க, அசோலா வளர்ப்பு செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. கால்நடை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக பராமரிக்கப்பட்ட கன்றுகளுக்கு முகாமில், பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாமில், மண்டல இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் மகேஸ்வரன், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி வேடியப்பன், துணை இயக்குநர் (நிர்வாகம்), கால்நடை பராமரிப்புத்துறை, அருணாசலம், பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி நிலையம், குண்டலப்பட்டி, கால்நடை உதவி மருத்துவர்கள் சிவக்குமார், தசரதன், ஜெயந்தி, சுதாமதி, ஆண்டன் ரோஸ்லின் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.