கோவை மாநகராட்சியில் டெங்கு ஆய்வு கூட்டம்
கோவை மாநகராட்சி கமிஷ்னரும், தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன் தலைமையில், மாநகராட்சி கூட்டரங்கில், டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு தொடர் நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மழைக்காலம் துவங்கி விட்ட காரணத்தினால், கேரளா உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாநிலங்களிலிருந்து, டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவும் சூழல் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மண்டலம் வாரியாக, ஒவ்வொரு வார்டு பகுதிகளில், டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் உள்ளிட்ட விபரங்களை கேட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவாக மாநகராட்சி கமிஷ்னரால் ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து, கொசு ஒழிப்பு பணியாளர்கள், பணிக்கு தினமும் காலை செல்லும் முன்பாக, அவர்களுக்கு பணிசெய்யும் முறை குறித்து, எடுத்துரைக்க, மண்டல சுகாதார அலுவலர்களுக்கு, சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்திரவிடப்பட்டது. மேலும், ‘ஹாட்ஸ்பாட்’ இடங்களில், அதிக கவனம் செலுத்தி, பணிகள் மேற்கொண்டு, கொசுப் புழுக்கல் முழுமையாக இல்லாத வண்ணம், பார்த்துக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.
டெங்கு பாதித்த இடங்களில், கல்லூரி மாணவ மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளில், தொடர்ச்சியாக கொசு உற்பத்தி காரணிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள், டிரம்கள், சிண்டெக்ஸ் ஆகியவற்றையும் முறையாக சுத்தப்படுத்தவும், அனைத்து நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரின் உரிய அளவில் இருப்பதை சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
அனைத்து மண்டல உதவி கமிஷ்னர்களும், மாநகர நல அலுவலரும் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா என்று, கண்காணிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், டெங்கு அதிகமாக பதிவாகும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி கமிஷ்னரால் எச்சரிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் வந்தால், சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். போலி மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக, காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொட்டிகளை பீளிச்சிங் பவுடர் கொண்டு, வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக, கொசு ஒழிப்பு பணிக்கு, பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கமிஷ்னர் விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், துணை கமிஷ்னர் காந்திமதி, மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி கமிஷ்னர் ரவி, மண்டல சுகாதார அலுவலர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.