ஈரோட்டில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கு
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை, எம்பி செல்வகுமார சின்னையன் முன்னிலையில், வருவாய் அலுவலர் கவிதா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:–
மக்கள் தொகை முக்கியத்துவத்தை, உலகம் முழுவதும், விழிப்புணர்வோடு அறிந்துகொள்ளவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும், குடும்ப நல முறைகளையும், தெளிவாய் அறிந்து பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வண்ணம், உலகம் முழுவதும், ஜூலை11 ந் தேதி, உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
மகப்பேறு சார்ந்த நலனை முன்னேற்றுவதாலும், சமூகத்தில் நிலவும் வறுமையை குறைப்பதாலும், மக்கள் தொகையை குறைக்க இயலும் என்பதே இந்நாளை அனுசரிப்பதன் முக்கிய குறிக்கோளாகும்.
இறப்பு விகிதத்தைவிட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் இந்திய அளவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, மக்கள் தொகையினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
அதன்பின்னர், உலகமக்கள் தொகை தினம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரியைச் சார்ந்த 12 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, எம்பி செல்வகுமார சின்னையன், வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினம் குறித்த ஒட்டுவில்லைகளை வெளியிட்டு, வாகனங்களில் ஒட்டினார்கள்.
கருத்தரங்கில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) பாலுசாமி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் எஸ்.ஆர்.இளங்கோ, மதியழகன் உட்பட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.