அப்துல்கலாம் நினைவு மணி மண்டபம்: 27–ந் தேதி ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் நினைவு மணி மண்டபம் வரும் 27–ந் தேதி திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
பாரத பிரதமர் நரேந்திரமோடி இந்த நினைவு மண்டபத்தை திறந்து வைக்க இருக்கிறார். இதற்காக பாதுகாப்பு பணி குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ராமேஸ்வரம் தீவு தங்கச்சி மடம் ஊராட்சிக்குள்பட்ட பேக்கரும்பு கிராமத்தில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 50 கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா, கலாமின் 2–வது நினைவு தினமான ஜூலை 27–ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணி மண்டபத்தை திறந்து வைக்க இருக்கிறார். இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடி, பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். மணிமண்டபத்தின் இறுதிக் கட்டப் பணிகளை, ராமநாதபுரம் கலெக்டர் எஸ்.நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் மணிமண்டபம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பேனர்கள் ஆகியனவும் அகற்றப்பட்டன. அப்துல்கலாம் நினைவிட மணி மண்டபத்தை வரும் 27–ந் தேதிக்குள் முடிக்க இரவு பகலாக ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
திறப்பு விழா அன்று நினைவிடம் வளாகத்தில் கண்காட்சியகம் அமைத்து அதில் கலாம் வாழ்க்கை வரலாறு, இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ.ல் அவர் பணியாற்றிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், கலாம் கண்டுபிடித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி ஏவுகணை’ இடம் பெற உள்ளது.