ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக மாவட்ட கலெக்டர் ச.நடராஜன் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினைத் துவக்கி வைத்தார்.
மருத்துவ முகாமினை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:–
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் பங்கேற்ற மாணாக்கர்களுக்கு காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோதனைகள், கண்பார்வை, எலும்பு முறிவு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கை மற்றும் கால்களில் குறைபாடு கொண்ட மாணாக்கர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, முடநீக்கி உபகரணங்களுக்கான அளவீட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டடது. இம்மாணாக்கர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக விலையில்லாமல் உபகரணங்கள் வழங்கப்படும்.
இதே போல 13.7.2017 அன்று பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 14.7.2017 அன்று திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 18.7.2017 அன்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 19.7.2017 அன்று சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 20.7.2017 அன்று சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 21.7.2017 அன்று ஆர்.எஸ்.மங்கலம் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 25.7.2017 அன்று கமுதி – கோட்டைமேடு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 26.7.2017 அன்று தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 27.7.2017 அன்று உச்சிப்புளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 28.7.2017 அன்று நயினார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் என அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாம்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாணாக்கர்கள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இம்முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மருத்துவர்கள் பெரியார் லெனின் (மனநலம்), மனோஜ்குமார் (எலும்பு முறிவு), சகாயமெர்சி (கண்பார்வை), முத்தமிழரசி (ENT) உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *