வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா கட்டலாங்குளத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டலாங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் 54 பயனாளிகளுக்கு ரூ16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேசியதாவது:–
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடியில் வசிக்கும் அனைத்து மக்களும் பயன்படும் வகையில் சிறப்பாக செயல்படுத்தினார்கள். நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி பணிகளில் தமிழகம் பிற மாநிலங்களை விட முதல் மாநிலமாக திகழ்வதை போன்று, வீரத்திலும் தியாக செயல்களிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தங்கள் உயிரிரையே தியாகம் செய்த வீரதிருமகன்களை போற்றும் விதமாக அத்தியாகிகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணிமண்டபங்கள், நினைவு இல்லங்கள், திருவுருவச்சிலைகள் அமைத்து அந்த வீரர்களின் சுதந்திரப்போராட்ட உணர்வுகள், அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் வீரச்செயல்களை அனைத்து தரப்பட்ட மக்களும் அறிந்து கொள்ளும்படி கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
நமது தூத்துக்குடி மாவட்டம் வீரத்தின் விளை நிலமாக திகழ்கிறது. மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரன் சுநத்தரலிங்கம், வீரன் வெள்ளையத்தேவன் போன்ற பலர் நமது மண்ணில் தோன்றி விடுதலைக்காக போராடினார்கள். பல நூற்றாண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டை மீட்டெடுக்க பலர் தங்களது இன்னுயிரை துறந்தார்கள். அந்த வகையில் நமது கட்டாலங்குளத்தில் பிறந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக போராடி தனது இன்னுயிரை துறந்தவர். நமது வீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள். வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, பீரங்கி வாயில் வைத்துப் பிளந்தாலும் தன் உரிமையை விட்டுத்தந்திட மாட்டோம். அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம் என்று, தன் உயிரை இழந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் விடுதலைப் போருக்கான விதையைத் தமிழகத்தில் விதைத்தார். அவர்கள் தியாக உணர்வை போற்றும் வகையில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி தமிழக அரசு சார்பில ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே அவரது தியாக உணர்வை நாம் அனைவரும் அறிந்து அன்னாரின் புகழை போற்றி பாதுகாக்கவேண்டும் என்றார்.
மேலும் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய தியாக செயலை போற்றும் விதமாக உள்ளுர், வெளியூர், வெளி மாநில மக்கள் மற்றும் பயணிகள், வெளிநாட்டினர் வந்து செல்லும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது முழு உருவச்சிலையை அமைத்து ஜெயலலிதா அன்னாரது வீர உணர்வுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றார்.
கலெக்டர் வெங்கடேஷ்
இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் என்.வெங்கடேஷ் பேசியதாவது: –
ஆங்கில அரசை எதிர்த்து, போரிட்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர் அழகுமுத்துக்கோன் 11.7.1710ம் ஆண்டு இவ்வுரில் பிறந்தார். எட்டையபுரம் பாளயத்தின் 28வது குறுநில மன்னராக இருந்த ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் நம்பிக்கையாளராகவும் நண்பராகவும் இருந்தார்.
1755ம் ஆண்டு ஆங்கிலேயகாரர்கள் எட்டையபுரம் மன்னரிடம் நேரடியாக வரி வசுலிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு வரிகட்ட மறுத்ததால், 1756ம் ஆண்டு மதுரை, நெல்லை ஆகியவற்றிற்கு கமென்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்ட, கான்சாகிப் என்பவரின் தலைமையிலான ஆங்கிலேய படையினர், எட்டையபுரத்தை போரிட்டு கைப்பற்றியது. நடைபெற்ற போரில் வீரர் அழகுமுத்துக்கோன் எட்டப்ப மன்னரை காப்பாற்றி, அவரை பெருநாழி என்கின்ற காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அங்குள்ள மன்னருக்குப்பதிலாக புதலபுரம் எட்டையா என்பவரை புதிய மன்னராக ஆங்கிலேய அரசு நியமித்தது. புதியதாக நியமிக்கப்பட்ட மன்னர் அரசின் கஜானாவை காலி செய்துவிட்டதால், அவருக்குப் பதிலாக ஜெகவீரரான எட்டப்ப நாயக்கரின் தம்பியான குருமலைதுரை என்பவரை மன்னராக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
எட்டையபுரத்தை மீட்டெடுக்க வீரர் அழகுமுத்துக்கோன் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்களை திரட்டி, 2 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு போர் பயிற்சி அளித்தார். 1 போர் பிரிவிற்கு தலைமையேற்ற விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன், 1759ம் ஆண்டு ஜூலை மாதம், எட்டையபுரத்தை கைபற்றுவதற்காக போரிட முயன்ற போது நடு இரவில் ஆங்கிலேயே படையால், வீரர் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட வீரர்கள், பீரங்கி வாயில் கட்டி வைத்து கொலை செய்யப்பட்டார்கள். ஆங்கிலேய அரசுக்கு அடிமையாக வாழ மாட்டோம் என ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, தன் உயிரை இழந்த மாவீரன் அழகுமுத்துக்கோன் தான் பிறந்த மாதமும் இறந்த மாதமும், ஜூலை மாதமாகும். அன்னாருடைய நினைவை போற்றுகின்ற வகையில் தமிழக அரசு அவருக்காக மணிமண்டபத்தை கட்டி, ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விழா எடுத்து சிறப்பிக்கிறது. இந்த நாளில் நாம் அனைவரும் தமிழகத்திற்கு பெருமை சோ்த்த இது போன்ற விடுதலை வீரர்களை மனதில் கொள்ள வேண்டும் என்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டம் 2016-2017ன் கீழ் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சத்து 60 ஆயிரத்துக்கான ஆணையினையும் 9 நகர்ப்புற சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரமும் பராக்கிராமபாண்டி, கீ.அப்பன்கோவில், தச்சமொழி ஊராட்சிகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிதியாக தலா ரூ.1 இலட்சம் வீதம் ரூ.3 லட்சமும் 11 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களையும் 25 குடும்பத்தாருக்கு மின்னனு குடும்ப அட்டைகள் என 54 பயனாளிகளுக்கு ரூ16 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வழங்கினார்.
பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆவின் தலைவர் எஸ்.ரமேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கல்லூர் இ.வேலாயுதம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சுதா கே.பரமசிவம், முன்னாள் மண்டல தலைவர் தச்சைமாதன், கோவில்பட்டி கோட்டாட்சியர் பி.அனிதா, வட்டாட்சியர் முருகானந்தம், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலுமயில், தங்கவேல், வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *