தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போல பயங்கரவாதம் பரவி வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

 

தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போல பயங்கரவாதம் பரவி வருவதை தடுக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாட்டில் மத்திய மற்றும் மாநில அளவிலான 17 வரிகளை மாற்றிவிட்டு ஒரே நாடு, ஒரே வரி என்ற முறை அமைய வேண்டும், ஒரே சந்தை வரியில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றிய குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாக விளக்க கூட்டம் நடந்து வருகிறது.
டெங்கு, ஜிகா வைரஸ் போல் தமிழகத்தில் பயங்கரவாதம் பரவி வருகிறது. அதை தடுக்க வேண்டும். கலவரம் செய்பவர்கள் கலவரம் செய்து கொண்டே இருப்பார்கள். அதை தடுக்காமல் இருந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறிவிடும் என்று அரசுக்கு நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் நான் கூறியதை வைத்து சிலர் புகார் தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் வழக்கு தொடர்ந்தால் பார்த்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. அதில் 1½ லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 70 சதவீத விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன. மதுவால் விபத்துகள் ஏற்பட கூடாது என்பதற்காகத்தான் மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளின் அருகே வைக்கக்கூடாது என்கிறார்கள். விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கபூர்வமான பணியாக செய்கிறார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் பாலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *