மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி மீண்டுமொரு தாக்குதல்: நாக்பூரில் அரங்கேறிய கொடூரம்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
பசு மாடுகள், எருமைமாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்தும், மாட்டுக் கறி வைத்திருந்ததாகவும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது ஜுனைத் கான் என்ற சிறுவன் மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள பர்சிங்கி பகுதியில் மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்த பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.