தமிழ்நாடு பிரிமீயர் லீக் இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது: ஹேமங் பதானி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் கிராமப்புற இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது என சேலத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் வழங்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2-வது தொடர் (டி.என்.பி.எல்.) வருகிற 22-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக சேலத்தில் நிருபர்களிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி கூறியதாவது:-
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றதை தொடர்ந்து, இந்தாண்டு கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலத்தில் குடும்ப விழாவாக கொண்டாடுவதற்கு ரசிகர்கள் பூங்கா எனும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிரிக்கெட் போட்டிகளை பிரமாண்ட நேரலையாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டி போல் பிரபல வர்ணனையாளர்களின் விமர்சனங்களுடன் போட்டிகள் நடக்க இருக்கின்றன. சொந்த ஊர் அணியை ரசிகர்கள் உற்சாகப்படுத்தும், அதே நேரத்தில் லக்கி ரசிகருக்கு கிரிக்கெட் வீரர்களுடன் நாள் பொழுதை கொண்டாட வாய்ப்பு உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக உள்ளது. இதில் விளையாடும் வீரர்களை ஐ.பி.எல். போட்டியில் தேர்ந்தெடுப்பதற்காக வீரேந்திர சேவாக் என்னிடம் பேசினார்.
நடராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பெரிய தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரால் பல இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைந்துள்ளன. ஐ.பி.எல். போன்ற பெரிய போட்டி தொடரை நடத்துவது சாதாரணமானது அல்ல. தற்போது டி.என்.பி.எல். தொடரும் வெற்றிகரமாக நடைபெற உள்ளது.
வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி பெரிய இடத்திற்கு செல்ல வாய்ப்பாக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளித்தார்கள். முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் இந்த போட்டி தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த தொடர் சர்வதேச தொடருக்கு சமமாக இருப்பதால், இங்கு விளையாடும் வீரர்களின் விளையாட்டு கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஊடக மேலாளர் பாபா, இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகி பழனியப்பன், சேலம் மாவட்ட கிரிக்கெட் செயலாளர் ராமசாமி, துணை தலைவர் செல்வமாளிகை மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *