விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே காலிறுதியில் போராடி தோல்வி

 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், நடப்பு சாம்பியனான பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் 24-ம் தரநிலை வீரரான சாம் கெர்ரியை எதிர்கொண்டார்.
அனுபவ வீரரான முர்ரே இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், அவரது முயற்சியை அமெரிக்காவின் இளம் வீரரான சாம் கெர்ரி தொடர்ந்து முறியடித்து அதிர்ச்சி அளித்தார். முதல் செட்டை கெர்ரி கைப்பற்றினார். இரண்டாம் செட்டை முர்ரே வசமாக்கினார். ஆனால், டைபிரேக்கர் வரை நீடித்த மூன்றாம் செட்டை, முர்ரே கைப்பற்றினார். அதன்பிறகு முர்ரேவை திணறடித்த கெர்ரி, அடுத்தடுத்து இரண்டு செட்களை கைப்பற்றினார்.
இறுதியில் 3-6, 6-4, 6-7 (4-7), 6-1, 6-1 என்ற செட்கணக்கில் கெர்ரி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், 2009ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் ஆண்டிரோடிக் அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை கெர்ரி பெற்றுள்ளார்.
ஆண்டி முர்ரே இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்திருப்பதால், உலகத் தரவரிசையில் அவரை நோவக் ஜோகோவிச் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், குரோஷிய வீரர் மரின் சிலிக், லக்சம்பர்க் வீரர் கில்லஸ் முல்லருடன் மோதினார். 5 செட் வரை நீடித்த இப்போட்டியில் மரின் சிலிக், 6-3, 6-7(8-6), 5-7, 7-5, 1-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தார்.
அரையிறுதி ஆட்டத்தில் மரின் சிலிக்-சாம் கெர்ரி பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *