திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 690 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

 

சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 690 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து நேற்று பிற்பகலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து வந்துகொண்டிருந்த பெண் பயணியை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். அவர் மதுரையை சேர்ந்த சுகந்தி என்று தெரிய வந்தது. தொடர்ந்து அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது.
பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் எடை கொண்ட முழுமை பெறாத 25 கேரட் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.
அதே விமானத்தில் வந்து இறங்கிய திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த முத்துமணி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோரும் ஆடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்த தலா 100 கிராம் எடை கொண்ட முழுமை பெறாத 24 கேரட் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சட்ட விரோதமாக மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த சுகந்தி, முத்துமணி, பாலசுப்பிரமணி ஆகிய 3 பேரிடமும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் நேற்று முன் தினமும் இரவு திருச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்போது சிங்கப்பூரை சேர்ந்த சம்சுல் நஹர் என்ற பெண் பயணி தனது உடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 150 கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 11 ஆயி ரம் ஆகும்.
நேற்று முன்தினம் காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஒரு தனியார் விமானத்தில் வந்து இறங்கிய அரியலூரை சேர்ந்த டயானா என்ற பெண்ணின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவுஅதிகாரிகள் சோதனை செய்ததில், அதில் மறைத்து வைத்து 140 கிராம் எடையுள்ள மோதிரத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த மோதிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம். இதுதொடர்பாக சம்சுல் நஹர், டயானாவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 690 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீப காலமாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *