இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த உதவி செய்ய தயார்: சீனா அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சினை விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான உதவிகளை செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் அந்த நாட்டு வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சுயாங் கூறி உள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து இருப்பதாகவும், இந்த பிரச்சினையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான உதவிகளை செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் அந்த நாட்டு வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சுயாங் கூறி உள்ளார்.

சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர், இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை அந்த இரு நாடுகளுக்கும் மட்டும் அல்லாமல் தெற்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று இந்தியா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும், சிக்கிம் மாநில எல்லையில் இந்திய ராணுவத்துடன் சீன ராணுவம் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையிலும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் இவ்வாறு கூறி இருப்பது, காஷ்மீர் பிரச்சினையில் அந்த நாடு மூக்கை நுழைக்க முயற்சிப்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *