கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்: ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் கிருஷ்ணா தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என ஆந்திர மாநில தலைமை செயலாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் 3909 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஆனால் இப்போது 103 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
சென்னைக்கு தினமும் 857 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 470 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
மாங்காடு அருகே உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து தற்போது தண்ணீர் பெறப்பட்டு சென்னைக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதே போல் நெய்வேலி சுரங்கத் தண்ணீரையும் வீராணம் குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து வினியோகம் செய்கிறார்கள்.
தற்போது போரூர் ஏரி தண்ணீரும் சென்னை குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது தவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் மீஞ்சூர், நெம்மேலி பகுதிகளில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து உள்ளது.
இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சென்னைக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் கிருஷ்ணா கால்வாயின் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வர வேண்டும்.
ஆனால் கண்டலேறு அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் ஆந்திர அரசு இன்னும் தண்ணீர் திறக்காமல் உள்ளது.
இதனால் தமிழக அரசு சார்பில் ஆந்திர மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
அதில் ஜூலை மாதம் முதல் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்த ஆண்டு காலதாமதமின்றி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *