தற்காலிக ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்க்க குழு: அமைச்சர் செங்கோட்டையன்
பகுதி நேர ஆசிரியர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அவர்களை அழைத்து பேசி ஒரு குழுவை அமைத்து அவர்கள் கோரிக்கை பற்றி பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-
தி.மு.க உறுப்பினர் பொன்முடி ஒரு கவன ஈர்ப்புதீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-
பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு அதிக பட்சமாக 7500 ரூபாய்தான் சம்பளம் கிடைக்கிறது. எனவே அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும் என்று அவர்கள் சொல்கிறார்கள். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்:- பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. பின்பு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 7500 பணம் வழங்கப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அவர்களை அழைத்து பேசி ஒரு குழுவை அமைத்து அவர்கள் கோரிக்கை பற்றி பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. உறுப்பினர் இ.கருணாநிதி: அங்குள்ள பெரிய ஏரி பகுதியில் 35 வருடமாக குப்பை கொட்டப்படுகிறது. அங்கு 1½ லட்சம் டன் குப்பை குவிந்துள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. அங்குள்ள குப்பைகளை அகற்றவும், குப்பையை வேறு இடத்தில் கொட்டவும் தி.மு.க ஆட்சியின் போது இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசு இனியாவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- இந்த குப்பைகளை துரிதமாக அகற்றவும், பயோமைனிங் முறைப்படி குப்பைகளை மட்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் படி ரூ. 7 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்குள்ள குப்பைகளை அகற்றவும், ஏரிப்பகுதியை தூய்மைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவு செய்யும் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதவை அமைச்சர் கே. சி. வீரமணி தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதன் கட்டணம் கடைசியாக திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், வசூலிக்கப்படும் கட்டணங்கள் பதிவுத்துறையில் செய்யப்படும் சேவைகளுக்கு நிகராக இல்லாமல் இருப்பதாலும் இந்த பதிவு கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது.
இதன் படி பதிவு கட்டணம் 2000 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.