தாது மணல் பிரச்சினை: நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தாது மணல் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறினார்.
சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தினார். அந்த அறிக்கை தாக்கல் செய்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் தாது மணல் அனுமதியின்றி வெட்டியெடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அம்மாவின் அரசு 2013-ம் ஆண்டிலேயே ககன்தீப் சிங் பேடியின் தலைமையில் சிறப்பு குழு அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிம சுரங்க குத்தகை பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆணையிட்டது.
பின்னர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இச்சிறப்புக் குழுவே ஆய்வு செய்ய நீட்டிப்பு உத்தரவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாது மணல் வெட்டியெடுப்பது கடந்த 8.8.2013 முதல் தூத்துக்குடி மாவட்டத்திலும், 17.9.2013 முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும் அரசினால் தடை செய்யப்பட்டு நடை சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
ககன்தீப் சிங் பேடி ஆய்வறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு 4.9.2017 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தாது மணல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசகராக சுரேஷ் 2016-ல் நியமிக்கப்பட்டார்.
தாதுமணல் தொடர்பான ஒரு பொது நல வழக்கின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் அரசு செயலர் அந்தஸ்தில் சத்தியப்ரதா சாகு, தலைமையில் குழு அமைத்து அதில் மத்திய அரசை சார்ந்த இந்திய அணுசக்தி துறை, ஐ.பி.எம், சுங்கம் மற்றும் கலால் துறை அலுவலர்களுடன் கனிமம் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த் துறை, நிலஅளவை ஆகிய துறைகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு, தற்சமயம் கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் மற்றும் அணுசக்தி கனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இந்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மேற்படி, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு தன்னுடைய 23.5.2017 தேதிய கடிதத்தில் மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசை சார்ந்த பாஸ்கராச்சாரியா செயற்கைகோள் விண்வெளி பயன்பாடு மற்றும் புவி தகவல் ஆய்வு அமைப் பின் உதவியுடன் கடற்கரை மாவட்டங்களில் உள்ள தாது மணல் படிவு பகுதிகள் முழுவதும் செயற்கைகோள் மூலம் கண்காணித்து அறிக்கை தர கோரியுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் வெட்டியெடுப்பது அரசினால் தடை செய்யப்பட்ட பின்பும், அனுமதியின்றி தாது மணல் வெட்டியெடுக்கப்படுவதாக நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டதால், நீதிமன்ற ஆணையின்படி தாதுமணல் வெட்டியெடுப்பதை முழுவதும் தடுக்கும் நோக்கிலும், வாகனங்களை தணிக்கை செய்யவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் மாவட்டத்தில் பணி புரியும் துணை ஆட்சியர், காவல்துறை, கனிம வளத்துறை, நிலஅளவை துறை மற்றும் இதர துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்க அரசினால் அறிவுறுத்தப்பட்டு, உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆலோசகர் சுரேஷ் தனது அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மேலும், இவ்வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.