டெங்கு– வைரஸ் காய்ச்சல் உஷார்: அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டசெயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.
* கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடுகளில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்வது, தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களில் கொசுக்கள் நுழையா வண்ணம் மூடி வைத்தல், குடிநீரைக் காய்ச்சி பருகுதல்.
* நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவும், பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
* பொதுசுகாதாரத் துறை சார்ந்த களப்பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் பற்றி பயிற்சி அளித்து,கொசு உற்பத்தியைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் வழங்குதல்.
காய்ச்சலுக்கான காரணம்
கண்டறிந்து….
* ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழுக்கள் காய்ச்சல் ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று, காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்துதல்.
* “எலிசா” முறையில் டெங்கு காய்ச்சலை கண்டு பிடிக்கும் சோதனை மையங்களின் எண்ணிக்கை 75லிருந்து தற்பொழுது 90-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து மாத்திரைகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், ரத்தக் கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்தல்.
* பொதுசுகாதாரத் துறை இயக்குனரகத்தில், செய்தித் தாள்களில் வரும் செய்திகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்கனவே இயங்கி வரும் கட்டுபாட்டு அறையை மேலும் வலுப்படுத்துதல்.
* காய்ச்சல் தொடர்பான தகவல்களை அளிக்கவும், பெறவும் சென்னை பொதுசுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 24 மணி நேரம் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் 044- 24350496, 044 -24334811 மற்றும் கைபேசி எண் 94443 40496.
நிலவேம்பு குடிநீர்,
பப்பாளி இலைச்சாறு….
* தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்த ப்பட்ட, இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நில வேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு இயற்கையாக காய்ச்சல் குணமடைய ஊக்குவித்தல்.
டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்க பொதுமக்களிடையேயான விழிப்புணர்வும் மற்ற துறைகளுடனான ஒருங்கிணைப்பின் அவசியத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை முற்றிலுமாக தடுத்து காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு மேலும் அர்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்டாக்டர் சி. விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.
தாங்களாகவே மருந்து
வாங்கி சாப்பிடக்கூடாது
காய்ச்சல் கண்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே மருந்துகடையில் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும், அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் முற்றிலுமாக தவிர்க்கவும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான சிகிச்சை பெறவும் அமைச்சர் அறுவுறித்தினார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இந்திய ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன்,சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் அருண் ராய், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எம். விஜயலட்சுமி, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர். ஏ. எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்துறை இயக்குநர் டாக்டர் பா. பானு, மருந்து கட்டுப்பாடு இயக்குநர் சிவபாலன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *