செம்மொழி தமிழாய்வு நிறுவன முத்திரையில் தமிழ் இடம் பெற்றுள்ளது
செம்மொழி தமிழாய்வு நிறுவன முத்திரையில் தமிழ் இடம் பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டசபையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து செம்மொழி தமிழாய்வு நிறுவன முத்திரையில் ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்றுள்ளது. தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு தெரியுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவை முன்னவரும், கல்வி அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளிக்கும்போது, இது சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வந்ததும் உடனடியாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அதிகாரியிடம் கேட்டேன். அவர் முத்திரையில் தமிழ் உள்ளது என்று கூறி அதற்கான சான்றிதழை அனுப்பி இருக்கிறார். அந்த சான்றிதழ் இது தான் என்று காட்டினார்.
முன்னதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்தபோது கூறியதாவது:–செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முழுமையும் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது. நிர்வாகம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. கடந்த காங்கிரஸ் அரசு காலங்களில் ஜனாதிபதி மாளிகையில் செம்மொழிக்கான விருதுகள் வழங்கப்படும் போது இந்தியிலும் ஆங்கிலத்திலும் விருதாளர்களை அழைத்து விருது தந்தார்கள்.
ஜெயலலிதா வழியில்…
இச்செய்தி அறிந்த ஜெயலலிதா அவரது மேலான வழிகாட்டுதலின்படி செம்மொழி கல்விக்குழுவில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் தமிழறிஞர்களுக்கு விருது தரும்போது அவர்கள் பெயரையும் அவரது தகுதியையும் ஏன் தமிழில் வாசிக்கபடக் கூடாது என்று வலியுறுத்தினார். அதன் பேரில் அடுத்த ஆண்டு முதல் தமிழிலும் விருதாளர்களுக்கான தகுதிகள் வாசிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன என்பதை இம்மான்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று ஊடகங்களில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக முத்திரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம் பெற்றிருப்பது குறித்து வெளிவந்துள்ளன. ஏற்கனவே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கல்விக்குழுவில் நிதிக்குழுவில் ஆளுகைக்குழுவில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆகியோர் மூலம் செம்மொழி மத்திய நிறுவனத்தின் நிர்வாக அலுவல்கள் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழில் மட்டுமே அமைதல் வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா கடந்த காலங்களில் மத்திய அரசின் தங்க நாற்கர சாலைகளில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தமிழ்நாட்டில் மைல் கற்களில் எழுதியபொழுது அம்மா தமிழ் என்பது தமிழ்நாட்டின் உணர்ச்சி இதில் யாரும் விளையாடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். அவரது வழியில் தமிழ் வளர்த்து தமிழ்நாட்டை காக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.