முகையூரில் மக்கள் திட்ட முகாம் : ரூ.10½ லட்சம்- நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்டம் முகையூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் 157 பயனானிகளுக்கு ரூ.10 லட்சத்து 38 ஆயிரத்து 266 – மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகை வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக 50 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தற்காலிக இயலாமை உதவித் தொகையாக ரூ.1,56,000 -மும், 2 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.25,000–-மும்,
திருமண உதவித்தொகையாக 15 பயனாளிகளுக்கு ரூ.1,36,000–-மும், கல்வி உதவித் தொகையாக 20 பயனாளிகளுக்கு ரூ.3,61,750–-ம், வேளாண்மைத்துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.3,000 – மதிப்பீட்டில் விசைத்தெளிப்பானும் வழங்கினார்.
ரூ.35 கோடியில் குடிநீர்
மேம்பாட்டு பணிகள்
2016–ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருகிறது. ஊரகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, மாவட்டம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி, நகராட்சி சார்பாக மாவட்டம் முழுவதும் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று உள்ளது. தங்கள் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால், தங்கள் நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்தால், அப்பகுதியைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலரை அனுப்பி, ஆய்வு செய்து, அப்பணிக்கான திட்ட மதிப்பீடு செய்து தங்கள் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியத்தினை பெற்று, தனிநபர் கழிப்பறைகளை கட்டி சுகாதார கிராமமாக இக்கிராமத்தினை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன்பேசினார்.
இம்முகாமில் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை, தனித்துணை ஆட்சியர் ரஞ்சினி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.