ஈரோடு அம்மா உணவகங்களில் நிலவேம்பு கசாயம்

ஈரோடு மாவட்டத்தில், பரவலாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், டெங்கு தடுப்பு பணிக்காக, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு பணி தீவிரம்

இவர்கள், வீடு வீடாகச் சென்று, டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ஏடிஎஸ் கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர். பருவமழை தொடங்கும் முன்னரே, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளாக, காய்ச்சல் கண்காணிப்பு பணி, வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு கொசுப்புழு மருந்து தெளிப்பு பணி, மழைத்தண்ணீர் தேங்கக்கூடிய மற்றம் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணி, கொசுக்களுக்கு புகைமருந்து அடிக்கும் பணி, பிளீச்சிங் பவுடர் தெளித்தல் பணி போன்ற பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும்படி, கலெக்டர் பிரபாகர், மாநகராட்சி கமிஷ்னருக்கு உத்திரவிட்டார்.

நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி

இந்த உத்திரவின்படி, கமிஷனர் சீனி அஜ்மல்கான், டெங்கு காய்ச்சல் போன்ற மர்மகாய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற ஈரோடு, சூரம்பட்டி வலசு, கொல்லம்பாளையம், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதேபோல், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 75 பள்ளிகளிலும், மாணவ மாணவிகள் நலன் கருதியும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஏடிஎஸ் கொசுப்புழுக்களை அழிக்க, 4 கொசு ஒழிப்பு புகை யந்திரம் வாகனத்தின் மூலமும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களில் கொசுமருந்து தெளிக்கும் கை யந்திரம் 10 வீதம் 40 யந்திரங்கள் மூலம் பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருவதாக ஈரோடு மாநகராட்சி கமிஷ்னர் சீனி அஜ்மல்கான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *