கோவையில் சுகாதார பணிகள் தீவிரம்

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம், சிங்காநல்லூர், ஜமீன் கோட்டாம்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை, ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய அலுவலர்களுடன், கலெக்டர் ஹரிஹரன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், சப்–கலெக்டர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும், பெரும் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், துறை உயர் அலுவலர்கள் மூலம், திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளபடுகின்றது.
அதன்படி இன்று, சிங்கநல்லூர், ஜமீன் கோட்டாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை மட்டுமல்லாது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், சமூக பாதுகாப்புத் துறை, கல்வித்துறை, உள்ளாட்சித் துறை உட்பட, மக்களுடன் சார்புள்ள அனைத்துத் துறைகளும் இணைந்து, காய்ச்சலை ஒழிக்க, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றனர்.
பொது இடங்களில், கொசு உற்பத்தியை குறைத்து, அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், புகை மருந்து மூலம், கொசுக்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடிநீர் மூலம் உற்பத்தியாகும் லார்வாக்கள் மூலம், பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால், அருகில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி, முறையான சிகிச்சை பெற வேண்டும்.
பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சி அமைபைச் சார்ந்த உயர் அலுவலர்கள் மாவட்டந்தோறும் குழுக்களாக பிரிக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டு, மேற்பார்வை செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரைகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் இருப்பில் உள்ளன.
இது தவிர எந்தப்பகுதிகளிலும், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு, காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்தப்பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, பொதுமக்கள் தங்கள் வீட்டினுள், தண்ணீர் கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தினை பேணிக்காக்க வேண்டும் என, கலெக்டர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி ஊராட்சியில் வீடு வீடாக சென்று, சுகாதார பணிகளை மேற்பார்வையிட்டு, குடிநீர் மாதிரிகளை, கலெக்டர் சோதனையிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், சப் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், கூடுதல் இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வடிவேலன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கண்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி மற்றும் சுகாதாரம், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *