சங்கரா கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
கோவை சரவணம்பட்டி அருகில் உள்ள சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ‘இகோ கிளப்’ துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ‘இகோ கிளப்பின்’ ஏற்பாட்டாளரும், தமிழ்துறை துணைப்பேராசிரியருமான சதீஷ்மோகன் வரவேற்று பேசினார். முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-–
இந்த உலகமானது, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட ஐம்பெரும் சக்திகளால் உருவானது. இவைகள், சரிவர தனது வேலைகளை செய்யத் தவறினால், உயிர்கள் வாழ முடியாது. பூகம்பம், மண்சரிவு உள்ளிட்டவை எற்படும்.
நீர் இன்றைய முக்கிய பிரச்சனையாக உள்ளது. மழைநீரை நாம் சேமிக்காததே இதற்கு காரணம். எல்லா உயிரினங்களுக்கும் காற்று அவசியம். தென்றாலாக அடிக்கும் காற்று, சூறாவளியாக மாறினால், அழிவு நிச்சயம். எல்லா உயிர்களுக்குள்ளும், வெப்பம் (நெருப்பு) உள்ளது. இந்த வெப்பம் இல்லை என்றால், இறப்பு நேரிடும்.
மழை நீரை புனித நீர்போல் சேகரிக்க வேண்டும். நாம் வாழும் இந்த பூமியை, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஐம்பெரும் சக்திகளை (சுற்றுச்சூழல்) பாதுகாத்தல் மிகவும் அவசியம் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர் மணி கலந்து கொண்டு பேசியதாவது:–
‘இகோ’ என்பது வீட்டைப் பற்றிய அறிவியல். நாம் வாழுகின்ற இந்த பூமிதான் எல்லா உயிரினங்களுக்கும் வீடு. 9 கோள்கள் உள்ள சூரிய குடும்பத்தில், பூமி மட்டுமே உயிர்வாழ ஏற்ற இடம். பூமியின் வயது 4.5 பில்லியன் வருடம் தட்பவெப்ப சூழ்நிலையின் காரணமாக, பூமியில் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தான் உயிரினங்கள் தோன்றியது.
மனிதன் தோன்றி 40 ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றாலும் இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அறிவு மட்டுமே. மனிதன் கண்டுபிடித்ததாக கூறும் அனைத்தும், இயற்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. கரையான் புற்று நவீன கட்டிடக்கலையின் ஒரு பகுதியே. விமானம், பறவைகள் பூச்சிகளின் மாதிரியே.
மனிதன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை சீர்கேடு செய்யாமல் இருந்தாலே போதும் இயற்கை தன்னைத்தானே காத்துக் கொள்ளும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் பெர்னாட் எட்வர்டு மற்றும் பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், துணைபேராசிரியர் பொன்ராஜ் நன்றி கூறினார்.