மேலூர் அரசு மருத்துவமனையினையில் கலெக்டர் வீரராகவராவ் திடீர் ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கம்பட்டியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனையினை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வருகிற பருவமழைக்காலத்தில் காய்ச்சல் பரவாமல் இருக்க அனைத்து முன்னேற்பாடு வசதிகளும் உள்ளனவா என்பது குறித்து மேலூர் அரசு மருத்துவமனையிலும் நரசிங்கம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் திடீரென்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு, ஊசி போடும் அறை, பிரசவப்பிரிவு, மகப்பேறு மருத்துவப்பிரிவு, டயாலிசிஸ் மையம், காய்ச்சல் வார்டு ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கம்பட்டி ஊராட்சி, புசாரிப்பட்டி கிராமத்தில் சேதுபாண்டியம்மாள் என்பவருக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமானப்பணிகளையும், வருவாய் ஒப்படைப்புத்திட்டம் 2015-16ன் கீழ் கள்ளந்திரி – பனைக்குளம் சாலை முதல் பெருமாள்பட்டி வழியாக மீனாட்சிபுரம் வரை செல்லும் 2.5 கி.மீ தொலைவு கொண்ட 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார்சாலைப்பணிகளையும் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்குப்பின் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:–
வருங்காலங்களில் பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால், நீரின் மூலம் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் டெங்கு பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை மதுரை மாவட்டத்தில் எந்தவொரு நபரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. பிற மாநிலங்களிலிருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் எவரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், உடனடியாக அவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் எவரேனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகளுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் உள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், மேலூர் வட்டாட்சியர் தமிழ்செல்வி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி (கிராமம்), கார்த்திகேயன் (வட்டாரம்), ஊரக வளர்ச்சிப் பொறியாளர்கள் நேரு, சுகன்யா, துரைக்கண்ணன், மேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.