பாரதியார் பல்கலையில் தேசிய அளவில் கருத்தரங்கு
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், இணையதள பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல் தொடர்பான, தேசிய அளவில் 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது. பேராசிரியர் தேவி வரவேற்று பேசினார். பயிலரங்கில், துணைவேந்தர் கணபதி தலைமை ஏற்று, சிறப்புரையாற்றினார்.
விரிவான ஆராய்ச்சி
அப்போது அவர் பேசியதாவது:–
பாரதியார் பல்கலைக்கழக சாதனைகள், டிஜிட்டல் பங்கேற்பை விளக்கி, நாஸ்காம் அறிக்கையில், இந்தியாவின் இணையதள பாதுகாப்பை உருவாக்க முயற்சி செய்யவும், அதன் முந்தைய நிலை மற்றும் தற்போதைய விரைவான வளர்ச்சியின் சாத்தியக் கூறுகள் மற்றும் 2025ம் ஆண்டிற்குள் இணைய தள பாதுகாப்பு தொடர்பான தொழிற் சேவையினை, 35 மில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கவும், உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப ஒரு மில்லியன் தொழிலாளர்களை உருவாக்க வேண்டும் என்றார். மேலும், அதிகரித்து வரும் சைபர் ஸ்பேசின் தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு திட்ட நிகழ்வு அமைத்து, விரிவான ஆராய்ச்சி தேவை என்று விளக்கினார்.
முன்னதாக, காவல் துறை கமிஷ்னர் அமல்ராஜ், பயிலரங்கினை தொடங்கி வைத்து பேசுகையில், பல்வேறு சம்பவங்களில் நடைபெற்ற சைபர் அச்சுறுத்தல்கள் பற்றி விளக்கினார். கைபேசியை பயன்படுத்தும்பொழுது, இணைய தாக்குதல் அதிகமாக ஏற்படுவதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.
குறுந்தகடு வெளியீடு
இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் தொடர்பான குறுந்தகட்டினை, துணைவேந்தர் கணபதி வெளியிட, அதன் முதல் பிரதியை போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ் பெற்றுக்கொண்டார். இணை பேராசிரியர் ஆ.புனிதவள்ளி பயிலரங்கு பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும், உதவி பேராசிரியர் ஏ.புவனேஸ்வரி நன்றி கூறினார்.
இந்த பயிலரங்கில், ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரி மாணவர்கள் என, 250 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.