கன்னியாகுமரியில் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி பெயர் சேர்க்க சிறப்பு முகாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் துவக்கினார்
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காகவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இன்று நாகர்கோவில், ஓரல் காது கேளாதோர் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமினை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட புதிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு பணி 2017 ஜூலை 01 முதல் 31-ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் ஜனநாயக கடமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் மூலம் இன்று நாகர்கோவில், ஓரல் காதுகேளாதோர் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறன் கொண்ட 35 மாணவ மாணவியர்களிடமிருந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய உறவினார்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள், கல்வி கற்பதை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.பி.பிரம்மநாயகம், தேர்தல் தனி வட்டாட்சியர் ப.சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் இரவிச்சந்திரன், ஓரல் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டோனி ஷெரின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.