தமிழக வீராங்கனை பவானிதேவி 2வது முறையாக வெள்ளி வென்றார்
உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு
தமிழக வீராங்கனை பவானிதேவி
2வது முறையாக வெள்ளி வென்றார்
சென்னை, ஏப்.30
ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சில் இந்த ஆண்டும் வெள்ளிப்பதக்கம் வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு புகழ் சேர்த்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி.
சர்வதேச வாள்வீச்சு சம்மேளனம் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் பல இடங்களில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிரபலமான Ôவைகிங் கோப்பைÕ சாட்டிலைட் போட்டி ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் தங்களது ரேங்கிங் புள்ளிகளை உயர்த்திக்கொள்வதற்காக கடுமையாக போராடிவரும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவியும் பங்கேற்று வருகிறார்.
கடந்த ஆண்டில் (2017) இதே ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பவானிதேவி இம்முறையும் இப்போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறினார். காலிறுதியில் வெனிசுலா நாட்டு வீராங்கனை பாரேட் டாரஸை 15க்கு9 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அதில் இத்தாலி வீராங்கனை கியூலா ஆர்பினோவை 15க்கு10 என்ற புள்ளிகளில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.
நேற்று(28.04.2018) நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலெக்சிஸ் பிரவுனை எதிர்கொண்ட பவானிதேவி அதில் 10க்கு15 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். அலெக்சிஸ் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
ஒலிம்பிக் போட்டிக்கு வீரர், வீராங்கனைகளை தயார் செய்வதற்காக தமிழக அரசின் எஸ்.டி.ஏ.டி.யில் நடத்தப்படும்.
எலைட் ஸ்கீம் திட்டத்தின்கீழ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவால் இணைக்கப்பட்ட பவானிதேவி, இத்திட்டத்தின் உதவியால் பல
போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து தனது ரேங்கிங்கை உயர்த்தி வருகிறார்.
உலக கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சில் தொடர்ந்து 2வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்று உலக வாள்வீச்சு அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவரும் பவானிதேவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.