சென்னையில் மே 19, 20 அன்று ரஷ்ய கல்விக் கண்காட்சி!

• 10-க்கும் மேற்பட்ட ரஷ்ய பொறியியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்களில் குறைந்த கட்டணத்தில் உயர்தரக் கல்வி!
• 2018-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேரும் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகையுடன் கூடிய அதிக இடங்கள்!

சென்னை, 16 மே 2018

சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் மருத்துவம், பொறியியல் கல்வியைக் கற்பிக்கும் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த இலவசக் கண்காட்சி, இரண்டு நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இளநிலை / நிறைநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் அதற்கு தகுதியான சான்றுகளுடன் வருகை தந்தால் அம்மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கப்படும்.

சென்னையில் 19-வது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியை, ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான – இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் (Study Abroad) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

சென்னையைத் தொடர்ந்து இத்தகைய கண்காட்சிகள் மே 21 அன்று ஒரே நாளில் மதுரை (ஓட்டல் ராயல் கோர்ட்), திருவனந்தபுரம் (ரஷ்ய கலாச்சார மையம்), ஹைதராபாத் (ஓட்டல் மேரி கோல்ட், அமீர்பேட்) ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன்தகுதி தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத் தேவையில்லை. ஆனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் (NEET) தேர்வு தேறியிருத்தல் வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் 2018-ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது அதற்கான முன் தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ கவுன்சில் இவ்வாண்டு விதி விலக்கு அளித்துள்ளது.

இக்கல்விக் கண்காட்சி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு பேசிய தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் கலாச்சாரத் துணைத் தூதர் திரு. மிகைல் ஜே. கோர்பட்டோவ் (Mr. Mikhail J. Gorbatov), “இந்திய – ரஷ்ய நாடுகளுக்கிடையேயான வலுவான நல்லுறவு நெடுங்காலமாக இருந்து வருகிறது. விண்வெளி ஆய்வு, பொறியியல், தொழில்நுட்பம், உயிர்வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்கள். ரஷ்யாவில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்கள் இந்த இரு நாடுகளைப் பற்றிய பொது அறிவை பெற்றிருப்பதால் இவ்விரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து இணைந்து வளர்வதற்கு அது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்தார்.

தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் துணைத் தூதர் திரு. யூரி எஸ். பிலோவ் (Mr. Yury S. Belov); வோல்கோகிரேடு ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் (Volgograd State Medical University) நோய் கூறியியல் இணைப் பேராசிரியர் திரு. ஸ்மித் மேக்சிம் (Mr. Shmidt Maxim); ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

வோல்கோகிரேடு ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், ஃபார் ஈஸ்டர்ன் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Far Eastern Federal University), நேஷனல் ரிசர்ச் நியூக்ளியர் பல்கலைக்கழகம் எம்.இ.பி.எச்.ஐ. (National Research Nuclear University MEPhI), உரால் பெடரல் பல்கலைக்கழகம் (Ural Federal University), எம்.ஐ.ஆர்.இ.ஏ. ரஷியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (MIREA Russian Technological University), சைபீரியன் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகம் (Siberian State Medical University), எம்.ஏ.ஆர்.ஐ. ஸ்டேட் பல்கலைக்கழகம் (MARI State University), பெல்கோராட் ஸ்டேட் பல்கலைக்கழகம் (Belgorod State University), ஓரன்பர்க் ஸ்டேட் மருத்துவ கல்வி நிறுவனம் (Orenburg State Medical Academy) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கேற்கின்றன. மருத்துவம், பொறியியில் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர்களின் தகுதிக்கேற்ப நேரடியாக கலந்தாய்வு செய்து உடனடி சேர்க்கை வழங்கப்படவுள்ளது.

இளநிலை மற்றும் நிறைநிலை படிப்புகளில் சேர்வதற்கு, மாணவர்கள், உரிய முக்கிய பாடங்கள் மற்றும் பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி. / எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதம் ஆகும். தமிழ் வழி பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகள் மற்றும் கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டப்படிப்புக் காலம் 4 ஆண்டுகள், ரஷ்ய மொழியில் இதனை படிக்க விரும்புவோர் அதற்கான முன் தயாரிப்பு ஓராண்டு படிப்பில் சேர வேண்டும். அதேப் போன்று மருத்துவ படிப்பினை ஆங்கில வழியில் படிப்பதற்கான காலம் 6 ஆண்டுகள், ரஷ்ய மொழியில் படிப்பதற்கு 7 ஆண்டுகள் (1 ஆண்டு முன் தயாரிப்பு பயிற்சி உள்பட) ஆகும்.

இந்திய மருத்துவ கவுன்சிலால் ஏற்பளிக்கப்பட்ட 100 அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் ரஷ்யாவில் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் அளிக்கப்படும் எம்.டி. பட்டம் இந்தியாவில் எம்.பி.பி.எஸ் பட்டத்திற்கு இணையானது.

ரஷ்ய கல்வித்தரம் மற்றும் படிப்புச் செலவுகள் பற்றி திரு. யூரி எஸ். பிலோவ் கூறுகையில், “ரஷ்யாவின் உயர் கல்வி தரமானது உலகளவில் மிகச் சிறந்த ஒன்றாகவும், முன்னேறியதாகவும் கருதப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ரஷ்யாவில் உயர்கல்விக்கான செலவு குறைவாகவே உள்ளது. ஏனெனில், ரஷ்ய அரசினால் பெருமளவு கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. விண்வெளி ஆய்வு, விண்வெளி கருவியியல், கப்பல் கட்டுதல், மருத்துவம் ஆகிய துறைகளில் ரஷ்யாவின் வளர்ச்சி உலகெங்கும் அறியப்பட்டதாகும்.

தற்போது உலகின் 200 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள 600 அரசு பல்கலைக்கழகங்களில் கல்வி பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

தற்போது ரஷ்யாவில் பல்வேறுபட்ட கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 10000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ரஷ்யாவில் கல்வி ஆண்டு 2018, செப்டம்பரில் தொடங்குகிறது.

பல்லைக்கழகம், கல்வி பயிலும் இடம், படிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ரஷ்ய மொழி வாயிலாக பயில்வதற்கு ஆண்டு ஒன்றிற்கான கட்டணம் 2500 அமெரிக்க டாலரிலிருந்து 4000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும். ஆங்கில மொழி வாயிலாக பயின்றால் ஆண்டு ஒன்றிற்கு 3500 அமெரிக்க டாலரிலிருந்து 6000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *