32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

திண்டுக்கல் ஒன்றிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையில் 32 கண்மாய்களில் சர்வே செய்து கல் ஊன்றினர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தேக்கவும்,நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் யூனியனில் 87 ஒன்றிய கண்மாய்கள் உள்ளன. திண்டுக்கல்லை ஒட்டிய கண்மாய்களில் சிலர் வீடு, கட்டடங்களாக ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை அகற்ற கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி ஊரக வளர்ச்சி, சர்வே, வருவாய் துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து கண்மாய் சர்வே செய்யும் பணி நடந்து வருகிறது. இது வரை 45 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு அகற்றும் பணி நடந்து வருகிறது. அடியனுாத்து ஊராட்சி பகுதியில் உள்ள சரவணசமுத்திர குளம், ராஜாகுளம், மீரா ராவுத்தர் குளம், செங்குளம், பெரியகுளம், மேட்டுக்குளம் வேடபட்டி குளம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அவகாசம் வழங்கிஅகற்றிட நோட்டீஸ் தயராகி வருகிறது.நோட்டீஸ் வாங்க மறுத்தால் கதவுகளில் ஒட்ட உத்தரவிட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் இதுவரை 32 கண்மாய்களை சர்வே செய்து அளவு கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. கண்மாய் அளவு கற்களுடன் முழு பரப்பபையும் ஜி.பி.ஆர்.எஸ்., கருவியில் பதிவு செய்து வருகின்றனர்.இப் பணிக்கென ஒன்றிய ஆணையாளர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் தலைமையில் குழு பணியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *