கருணாநிதியைப் போல் வருங்காலத்தில் ஸ்டாலின் பற்றியும் பேசுவோம்: ராகுல் காந்தி

இன்று கருணாநிதி பற்றி பேசுவது போல் ஒரு நாள் நாம் ஸ்டாலினை பற்றியும் பேசுவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது

”திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறேன். வலிமையும், துணிவும் தான் அவரது ஆற்றல். மக்களை கருணாநிதி நேசிப்பதும், கருணாநிதி மக்களை நேசிப்பதுமே அவரின் தொடர் வெற்றிக்குக் காரணம். கருணாநிதியின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. அவர் பல்லாயிரக்கணக்கானோர் நேசிக்கும் தலைவர்.

5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக கருணாநிதி இருக்கிறார். அவரது சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. கருணாநிதியின் எழுத்துகள் எல்லாம் மக்களின் எண்ணங்களையே பிரதிபலித்தது. அவரின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. நாங்கள் வேறு மாநிலத்திலிருந்து வந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்திருக்கிறோம்

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முக்கிய பிரச்சினைகளில் யாரையும் ஆலோசிக்காமல் பிரதமர் மோடி முடிவெடுக்கிறார். யாரையும் கேட்காமல் பணத்தை செல்லாது என பிரதமர் அறிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பொருளாதார வீழ்ச்சியை அருண் ஜேட்லி ஏற்கவில்லை.

இப்போது நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தை திணிக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் கொள்கை திணிப்பை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் ஒரே சிந்தனை திட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். அனைத்து குரல்களும் ஒன்றிணைந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும்.

தமிழக மக்களுக்காக ஸ்டாலினும் பேசி வருகிறார். ஒரு மாபெரும் மனிதரின் இடத்தை நிரப்பும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது ஸ்டாலின் சரியான திசையில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். இன்று கருணாநிதி பற்றி பேசுவது போல் ஒரு நாள் நாம் ஸ்டாலினை பற்றியும் பேசுவோம்” என்றார் ராகுல் காந்தி.

பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே நம் முன் உள்ள சவால்: ஸ்டாலின்

பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே நம் முன் உள்ள சவால் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது

”19 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பில் இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. 48 ஆண்டுகள் திமுகவை அவர் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். தேர்தல்களில் தோல்வியடையாத ஒரு தலைவரை இந்தியா பார்த்ததில்லை. 13 தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் இந்தியாவில் கருணாநிதி மட்டுமே. இந்திரா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல பிரதமர்கள் உருவாக காரணமாக இருந்தவர் அவர்.

கருணாநிதிக்கு தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரை மேடைக்கு அழைத்து வர முடியவில்லை. வைரவிழா மேடையில் கருணாநிதி இல்லாதது அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. அவருக்கு மட்டும் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிராக முதல் ஆளாக குரல் கொடுத்திருப்பார்.

நாட்டை காவிமயமாக்க காய்களை நகர்த்தி வருகிறது பாஜக. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதே நம் முன் உள்ள சவால்.

இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த இயக்கம், மதச்சார்பற்ற அரசியலைக் கடைபிடிக்கும் இயக்கம்தான் திமுக. நாட்டின் பல பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு பதிலளிக்கும் விதமாக வைரவிழா அமைந்திருக்கிறது. இன்னொரு சுதந்திர போராட்டத்தை சந்திக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்

வைரவிழாவை சில தலைவர்கள் விமர்சித்தார்கள். விமர்சனம் செய்தவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. தம்பியின் அழைப்பை ஏற்று வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று ஸ்டாலின் பேசினார்.

ஆன்லைன் மூலம் செவிலியர்கள் பணி இடமாறுதல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

செவிலியர்களுக்கான பணி மாறுதல் ஆன்லைன் மூலம் இனி நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, அண்ணா நகரில் அமைந்துள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் சிறப்பு சிகிச்சை முறை தொடக்க விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–அம்மாவினால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நியமனத்திற்காக மருத்துவப் பணியார் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இத்தேர்வு வாரியம் மூலம் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நியமனங்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு வரலாற்று நிகழ்வாக 9990 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் அவர் கூறும் பொழுது செவிலியர்கள் பணிமாறுதலானது இதுவரை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் செவிலியர்கள் பணிமாறுதல் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மிகுந்த வெளிப்படையான முறையில் நடத்தப்படும். இதற்கான திட்டமிடல் பணிகள் வேகமாக முடிக்கப்படும்.
இம்முறையில் நிரந்தர செவிலியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் நிலை 1 மற்றும் நிலை 2 என அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்தார். ஆன்லைன் முறை கலந்தாய்வு அனைத்து செவிலியர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஆட்சிக்கு வரலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஆட்சிக்கு வரலாம் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நாகை மாவட்ட அண்ணா தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கழக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தலைமை தாங்கினார்.  முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம் வரவேற்றார். முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், மாவட்ட இணை செயலாளர் விஜயபாலன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
அண்ணா தி.மு.க. தொண்டர்கள் 100க்கு 100 சதவீதம் நம்முடைய பக்கம் தான் உள்ளனர். ஆனால் 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஆட்சியை நகர்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டு அந்த நம்பிக்கையில் உள்ளனர். ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இந்த கட்சி சென்றுவிடக்கூடாது என்று எண்ணி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியை கொண்டு செல்லவில்லை. அதைத்தான் நாம் கூறுகிறோம். ஆனால் நமது அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றாமல் இணைவோம் என்று ஒரு பொய்யை மெய்யாக கூறுகிறார்கள். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. மக்கள் தான் எஜமானர்கள். நல்ல தீர்ப்பை அவர்கள் வழங்குவார்கள்.
இணையுமா?
ஜெயலலிதா 74 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ. மூலம் உரிய நீதி விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஆனால் அதை இந்த  அரசு செய்ய முன்வரவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இது மக்கள் புரட்சியாக வெடிக்கும். உங்கள் ஆட்சி வீட்டுக்கு போகும். ஜெயலலிதா மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதால் தான் தமிழர்களின் நெஞ்சில் இன்றும் தெய்வமாக வாழ்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டும். அதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை விடுவிக்க வேண்டும். அதுவரை எங்கள் தர்ம யுத்தம் தொடரும். நமது அடிப்படை கோரிக்கை சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான். ஆனால் அவர்கள் அதை விடுத்துவிட்டு இணைவோம் என்று தவறான தகவலை விதைக்கிறார்கள்.
ஸ்டாலின் கனவு
தேர்தல் ஆணையம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கும். அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம், இரட்டை இலை சின்னம் நம்மிடம் வந்து சேரும். உண்மையான அண்ணா தி.மு.க. நாம் தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கும். அதன் பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.  தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களின் எதிர்பார்ப்பை, உரிமையை நிறைவேற்றவில்லை. காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நீதிமன்றம் மூலம் நமது உரிமையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. இலங்கையில் போர் நடந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, மத்திய அரசிலும் அங்கம் வகித்தார். ஆனால் போர் நிறுத்தத்துக்காக எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. மு.க.ஸ்டாலின் காண்பது பகல் கனவு. அதை அண்ணா தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி முறியடிக்கும். சசிகலாவை பொதுச்செயலாளராகவோ, முதலமைச்சராகவோ ஆக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் கூறியது இல்லை. மக்கள் ஆதரவோடு, பெண்கள் ஆதரவோடு தர்மயுத்தம் வெல்லும். ஜெயலலிதா ஆட்சி அமையும். அதை தமிழக மக்கள் நடத்திக்காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

மின்னனு வாக்குப்பதிவு பலப்பரீட்சை: டெல்லி தேர்தல் ஆணையத்தில் துவங்கியது

மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மீதான பலப்பரீட்சை புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று காலை தொடங்கியது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன.
இதனையடுத்து கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திர சவாலை இன்று முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் மீதான பலப்பரீட்சை தலைநகர் புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், தேசியவாத காங்கிரஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன.
முன்னதாக மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது பலப்பரீட்சை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உத்தரகாண்ட் ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 15-வது கவுன்சில் கூட்டம்: டெல்லியில் நடைபெறுகிறது

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலாகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் இதற்காக சட்டசபை கூட்டவில்லை.
இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கு கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது. இதில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என, நான்கு வித வரிகள் உள்ளன.
முன்னதாக கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற 14-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 1,200 பொருட்கள், 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு, வரி நிர்ணயித்தது.
ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 15-வது கவுன்சில் கூட்டம் அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடை பெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் வழங்கினர்

சென்னை ராயபுரத்தில் நடந்த அம்மா திட்டம் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் முன்னிலையில் வழங்கினர்.
சென்னை தண்டையார்பேட்டை வட்டம் ராயபுரத்தில் அரசு அலுவலர்கள் நேரில் சென்று சான்றிதழ்கள் கோரும் மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் அம்மா திட்டம் முகாமில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் முன்னிலையில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார்கள்.
மேலும், இம்முகாமில் 240 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 5 பயனாளிகளுக்கு சலவை பெட்டிகள், 15 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை, 10 மாற்றத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி: 9–ந் தேதி எடப்பாடி திறந்து வைக்கிறார் இந்த ஆண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்ப்பு

பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று திறந்து வைக்கிறார்.
10 கோடி ரூபாய் செலவில் 13 மருத்துவமனைகளில் கட்டணமில்லா கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் விரைவில் துவக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அம்மாவின் அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. இதனடிப்படையில் அம்மா புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவ குழுமத்தின் விதிகளுக்கு உட்பட்டு பத்தே மாதங்களில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் வரலாற்று சாதனையாக கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் 150 மாணவர் சேர்க்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
இம்மருத்துவக் கல்லூரியினை திறப்பதற்கான ஆயத்த பணிகள் குறித்து அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் பேசிய அமைச்சர்,
புரட்சித் தலைவி அம்மா ஆணைக்கிணங்க புதுக்கோட்டையில் பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி வரும் 9–ந் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறும் பொழுது, தமிழ்நாட்டில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக இதுவரை தனியார் மருத்துவமனைகளையே அதிக பொருட்செலவில் மக்கள் நாடி வந்தனர். ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் விரைவில் 10 கோடி ரூபாய் செலவில் 13 அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா கருத்தரிப்பு சிகிச்சை மையங்களை அமைக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாரதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதி உதவி

வழி தவறி ஊருக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்து மற்றும் படுகாயமடைந்த குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.17.77 லட்சத்திற்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வழங்கினார்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டம் குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் எதிர்பாராதவிதமாக காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் உயிரிழந்தவர்களின் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.17.77 லட்சம் நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவிக்கையில்,
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி மற்றும் வெள்ளளுர் ஆகிய பகுதிகளில் 2–ந் தேதி காலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் 7 பேர் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த காயத்ரி (12), நாகரத்தினம் (50), ஜோதிமணி (68), பழனிச்சாமி (73), ஆகிய 4 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 4 லட்சமும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு தலா 59,100–-ம் என மொத்தம் ரூ.17.77 லட்சத்திற்கான காசோலை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டிலிருந்து வழித்தவறி ஒற்றை யானை ஊருக்குள் வந்துள்ளது.
இச்சம்பவமானது எதிர்பாராத விதமாக நடைபெற்றுள்ளது. வனத்துறையின் மூலம் இரவு முழுவதும் தினந்தோறும் காட்டு விலங்குகள் காட்டிலிருந்து வெளியே வராத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாடிவாயல் யானைகள் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்ட பாரி என்ற கும்கி யானையின் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி காட்டுயானை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த காட்டு யானையினை டாப்சிலிப் வரக்கடி யானைகள் முகாமிற்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில்,
கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளிலிருந்து வன விலங்குகள் ஊருக்குள் புகாத அளவிற்கு அகழிகள் தோண்டப்பட்டுள்ளது. மேலும், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் மற்றும் எந்த வித வன விலங்குகள் புகாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து வெள்ளனூர் பகுதியில் காட்டு யானையை கும்கி யானை உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் யானை தாக்கி காயமடைந்தவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளலூரை சேர்ந்த நாகராஜனை நோில் பார்வையிட்டு சரியான முறையில் விரைவில் குணமடையும் வகையில் சிகிச்சைகள் மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் மு.அர்ஜுனன், எட்டிமடை எ.சண்முகம், மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், மண்டல முதன்மை வன பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி மற்றும் காவல்துறை, வனத்துறை, வருவாய்துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அயர்லாந்து பிரதமராகிறார் இந்திய வம்சாவளி டாக்டர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல டாக்டரான லியோ வரத்கர், அயர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அயர்லாந்தின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
அயர்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்க இருக்கிறது.
38 வயதாகும் வரத்கர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு உடையவர். பைன் கேயல் கட்சியைச் சேர்ந்த இவர் வெற்றிபெற்றதை பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
வரத்கர், கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவு கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று கட்சியின் 11-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பையை சேர்ந்த இந்தியரான அசோக் வரத்கர், அயர்லாந்தின் நலத்துறை அமைச்சரான மிரியம் தம்பதியின் மகன் வரத்கர். அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி தனது பதவியை 2017 தொடக்கத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், வரத்கர் பிரதமராக பொறுக்கேற்க உள்ளார்.