பூட்டை உடைத்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் திருட்டு

முதுகுளத்தூர் அருகில் அபிராமம் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே அபிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.இக்கடையின் சூப்பர்வைசராக மாரிமுத்து பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றுள்ளார்.பின்பு நேற்று காலை கடைக்கு வந்த மாரிமுத்து, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ 3 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் களவாடப் பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குளத்தை தூர்வாராமல் அதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்ததாக பொய் கணக்கு?

தாராபுரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி மாவட்ட நிர்வாகம் அந்த குளத்தை தூர்வாருவதற்காக 100 நாள் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் நிதியை ஒதுக்கியது. அந்த குளம் தூர்வாரப்படவில்லை.

ஆனால் குளத்தை தூர்வாரியதாகவும், இதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்பட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. இதன்மூலம் குளத்தை தூர்வாரியதாக பொய் கணக்கு காண்பிக்கப்பட்டதாக பொதுமக்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து தூர்வாரிய குளத்தை காணவில்லை என்றும், தங்கள் கிராமத்தில் குளம் எதுவும் வெட்டப்படாத நிலையில் அரசிடம் இருந்து குளம் வெட்ட நிதி பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக இது தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அதிகாரி சுப்பிரமணி, செயற்பொறியாளர் ஜெயந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குளத்தை தூர்வாராமல் அதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்ததாக பொய் கணக்கு காண்பிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்த விசாரணை அறிக்கை கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இதன்படி குளத்தை தூர்வாராமல் பொய் கணக்கு காண்பித்ததாக நஞ்சியம்பாளையம் ஊராட்சி செயலாளர் நாகராஜை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நஞ்சியம்பாளையம் ஊராட்சி செயலாளராக, பொம்மநல்லூர் ஊராட்சி செயலாளர் பெரியசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல, தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளை வீட்டுமனை பட்டாவாக மாற்றி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 40–க்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதுகுறித்து கலெக்டரிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி ராகவேந்திரன் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அவருடைய விசாரணையின் பேரில் வீட்டுமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி செயலாளர் நாச்சிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 2 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாராபுரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் மேலும் இதுபோல பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மாணவர்களை காவு வாங்க காத்திருக்கும் தனியார் மேல்நிலைப்பள்ளி

முதுகுளத்தூரில் மாணவர்களை காவு வாங்க காத்திருக்கும் தனியார் மேல்நிலைப்பள்ளி

பெற்றோர்கள் புகார்
முதுகுளத்தூர் ஜூன் 11
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகரின் மையத்தில் அமைத்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை காவு வாங்க காத்திருப்பதாகவும், மற்றொரு மவுலி வாக்கம் கட்டிட விபத்தாக ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெற்றோர்கள் பதற்றத்தில் உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள, முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்திற்கு பாத்தியப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி 1952-ல் நடுநிலைப் பள்ளியாகவும், அதன் பின் உயர்நிலைப் பள்ளியாகவும், 1988-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த எந்த வித அடிப்படை வசதியும் இப்பள்ளியில் கிடையாது. ஆரம்பத்தில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியாக இருந்த போது இப்பள்ளியின் ஜமாத்திற்கு சொந்தமான பிரதான ஒரே ஒரு கட்டிடத்தில் உள் பகுதியில் பள்ளியாகவும், வெளியே மெயின் பஜாரில் வணிக வளாகமாகவும் செயல்பட்டது. அப்போது குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே படித்தனர். பின்பு அரசியல் செல்வாக்கினாலும், முதுகுளத்தூர் ஜமாத்தை சேர்ந்த நைனா முகம்மது என்பவர் பள்ளிக் கல்வி துணை இயக்குனராக இருந்ததால், அதிகார துஷ்பிரயோகம் செய்து எந்த வித கட்டிட வசதியோ, காற்றோற்றமோ, சுகாதார வசதியோ , விளையாட்டு மைதானமோ கழிப்பறை வசதியோ இல்லாமல் முழுமையாக கல்வித்துறையின் சட்ட விதிககளுக்கு முரனாக செயல்பட ஆரம்பித்தது.
இப்பள்ளியின் மேல் மாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆஸ்பட் டாஸ் கூரையில்தான் மாணவர்களுக்கு தற்போது வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருகிறது. கட்டிட வசதி குறைவாக இருப்பதாலும், மாணவர்கள் அதிகம் சேர்ந்து படிப்பதாலும் இப்பள்ளியின் பின்புறம் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சரவணப் பொய்கை ஊரணியை ஆக்கிரமிப்பு செய்து ஊரணியை மேவி, நீர் நிலைகளில் பள்ளி யோ கல்லூரி யோகட்டப்பட கூடாது என்ற அரசின் சட்டத்தை மீறி இந்த சரவணப் பொய்கை ஊரணியை சுமார் 4 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து, போலியான பட்டாப் போட்டு, வகுப்பறை கட்டிடம் கட்டி, அதில் மாணவர்கள் பீதியின் உட்சத்தில் பயின்று வருகின்றனர். இவ்வகுப்பறை கட்டிடம் கட்ட தமிழக அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் போலி சான்றுகள் பெற்று, கட்டிடம் கட்டி, அதை வகுப்பறையாக பயன்படுத்தி மாணவர்கள் படித்து வருகின்றனர்.கடந்த 1998ம் ஆண்டு உதயச்சந்திரன் சப்-கலெக்ட்டராக இருந்த போது, ஆக்கிரமிப்பு செய்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார். ஆனால் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள் சிறுபாண்மை பள்ளி என்ற ஒரே காரணத்திற்காக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாணவர்களின் உயிர் விசயத்தில் அலட்சியம் காட்டி விடுகிறார்கள். ஏதேனும் போரிடர் அபாயம் ஏற்படும் போது நிச்சயமாக நீர் நிலைகளை மேடாக்கி கட்டப்பட்ட இப்பள்ளி மிகப்பெரிய அபாயமும், உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளை அகற்றி மாணவர்களை காவு வாங்க துடிக்கும் இப் பள்ளிக்கு பூட்டுப் போட்டு தடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.இதை அலட்சியப்படுத்தினால் முதுகுளத்தூரில் மீண்டும் மவுலி வாக்கம் நிகழலாம். எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்
படங்கள் 1. முதுகுளத்தூரில் சரவணப் பொய்கை ஊரணியில் நீர் நிலைகளில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி
2. முதுகுளத்தூரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயிலும் ஆஸ்பட்டாஸ் கூறையினால் ஆன வகுப்பறை.
3. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளிவணிக வள்

வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் சரமாரி வெட்டி கொலை..

சென்னை கொரட்டூரில் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி, 53. இவருக்கு அப்புன், மணிபாரதி, விவேக், அரவிந்தன் 24, ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சார்ந்த மஞ்சுளா என்பருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மஞ்சுளாவை ரவியின் மூத்த மகன் அப்புன் தலையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் கடந்த 4 வருடங்களாக இன்னும் அதிகமாக இருந்ததாக தெரிகிறது.
இதன் மூலம், மூன்று மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் மகன் ஆகஷ்ய் 22 என்பவரை, அப்புன் மற்றும் அரவிந்தன், விவேக் சேர்ந்து கொலை செய்ய முயன்றனர். இது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், அந்த கொலைமுயற்சிக்கு பழிவாங்கும் விதமாக நேற்றிரவு 9.30 மணி அளவில் வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த அரவிந்தனை, பத்து பேர் கொண்ட கும்பல் அதே இடத்தில் அரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தனர். இதில் அரவிந்தன் சம்பவ இடத்திலியே துடிதுடிக்க பலியானார். அரவிந்தனுடன் படுத்திருந்த குடியரசன் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக விக்கி, ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோரை கைது செய்துள்ள கொரட்டூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 6 மாத கூடுதல் உற்பத்தித் திட்டம்

கைத்தறி நெசவாளர்களுக்கு 6 மாத
கூடுதல் உற்பத்தித் திட்டம் அறிவிப்பு

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்

சென்னை, ஜூன் 14

கைத்தறி நெசவாளர்களுக்கு வரும் பொங்கல் முதல் ஜூன் மாதம் வரை கூடுதல் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்புகளில் முதல்வர் இதனைத் தெரிவித்தார். முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு

அனைத்து கைத்தறிகள் மற்றும் பெடல் தறிகளுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு கூடுதலாக உற்பத்தித் திட்டம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு, வரும் பொங்கல் 2019 முதல் ஜுன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் 9,692 பெடல் தறிகள் போக எஞ்சிய 1,558 பெடல் தறிகளுக்கு மேற்படி 6 மாத காலம் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் 6,975 பெடல் தறிகள் போக எஞ்சிய 4,275 பெடல் தறிகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை 5 மாதங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் உற்பத்தித் திட்டம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் மொத்தமுள்ள 11,250 பெடல் தறிகளுக்கும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் விலையில்லா சீருடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சீருடைத் துணிகளை பதனீடு செய்வதை முக்கிய பணியாக கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இவ்வாலை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய 7 மாதங்கள் முழுமையாக செயல்படுகிறது. மீதமுள்ள 5 மாதங்கள் பதனிடுவதற்கு போதுமான துணி இல்லாததால் குறைந்த திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையை கருத்திற்கொண்டு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சீருடைத் துணி பதனீட்டு பணி இல்லாத காலங்களில் தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஆலையை தொடர்ந்து லாபத்தில் இயக்க செய்யவும், ஒரு தொகுதிக்கு 2 டன் வீதம் 60எஸ் கோம்டு நூல் சாயமிடும் திறன் கொண்ட சாயமிடும் அலகு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டைகளை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன. வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் ஒரு, 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகு, ரூ.1.5 கோடி செலவில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை முழுவதுமாக பயன்படுத்தி பட்டு நூல் உற்பத்தி செய்ய நடப்பாண்டில் பட்டு நூற்பு அலகுகளை நிறுவிட மாநில அரசின் பங்காக நிதியுதவி வழங்கப்படும்.

தமிழகத்தில் 400 முனைகள் கொண்ட 3 தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட, ரூ.1,05,77,000 ரூபாயும், 200 முனைகள் கொண்ட ஒரு தானியங்கி பட்டு நூற்பு அலகினை நிறுவிட, ரூ.19,96,000 ரூபாயும், ஒரு தானியங்கி டூபியான் பட்டு நூற்பு அலகினை நிறுவிட, ரூ.11,44,000 ரூபாயும், 100 முனைகள் கொண்ட 25 பல்முனை பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட, மாநில அரசின் பங்காக ரூ.1,06,81,000 ரூபாயும், இரண்டு தனியார் பட்டு முறுக்கேற்றும் அலகுகளும், ஒரு அரசு பட்டு முறுக்கேற்றும் அலகும் நிறுவிட ரூ.10,04,000 ரூபாயும் வழங்கப்படும்.

கைக்கு எட்டியது; வாய்க்கு எட்டவில்லை அதிகாரிகள் தவறால் ரூ.26 லட்சம் போச்சு

கைக்கு எட்டியது; வாய்க்கு எட்டவில்லை அதிகாரிகள் தவறால் ரூ.26 லட்சம் போச்சு

சிவகங்கை, புலியடிதம்மம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊர் பெயர் மாறியதால், ஒதுக்கீடு செய்த பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை 26 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் 2016-17 ல் நெல் பயிருக்கு 84 ஆயிரத்து 229 பேர் இன்சூரன்ஸ் செய்தனர். முதற்கட்டமாக 2016 நவ., 30 வரை பதிவு செய்த 71 ஆயிரத்து 270 விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடாக 250.90 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் புலியடிதம்மம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பதிவு செய்த 1,023 விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.தொடர் போராட்டத்தை அடுத்து, 3.5 கோடி ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அதிலும் சில விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தற்போது 2016 நவ., 30 வரை பதிவு செய்து விடுபட்ட மற்றும் நவ., 30 க்கு பின், டிச., 15 வரை பதிவு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடாக சிவகங்கை மாவட்டத்திற்கு 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதில் புலியடிதம்மம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாராத்துாரைச் சேர்ந்த 104 விவசாயிகளுக்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டது.ஆவணத்தில் மாராத்துாருக்கு பதிலாக மரக்காத்துார் என, குறிப்பிடப்பட்டதால், இழப்பீடு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.மாராத்துார் விவசாயி நடராஜன் கூறியதாவது: இந்த கூட்டுறவு சங்கத்தில் 2016-17 ல் புலியடிதம்மம், மரக்காத்துார், மாரத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்தனர். மாராத்துாருக்கு 68 சதவீத இழப்பீடு அறிவிக்கப்பட்டது. பல மாதங்கள் போராட்டத்திற்கு பின், தற்போது இழப்பீடு கிடைத்தது. அதுவும் 58 சதவீதம் தான். அந்த தொகையையும் தர மறுக்கின்றனர். ஊர் பெயரை மாற்றி பதிந்தது அதிகாரிகள் தவறு.

மூணாறில் நிலச்சரிவு எதிரொலி கட்டுமானப்பணிகளை நிறுத்த நோட்டீஸ்.

உதகை கூடலூர் வருவாய் துறை அதிகாரிகளுக்கு பாருங்கள் இது போல் முன்னெச்சரிக்கையாக பணி செய்வது எப்படி என்று!!?

மூணாறில் நிலச்சரிவு எதிரொலி கட்டுமானப்பணிகளை நிறுத்த நோட்டீஸ்

மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு தனியார் தங்கும் விடுதியின் மூன்று மாடி கட்டடம் மண்ணிற்குள் புதைந்த சம்பவத்தையடுத்து, பத்து தங்கும் விடுதிகளின் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு வருவாய்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.மூணாறு அருகே ஆனச்சால், ஆல்தரா பகுதியில் பலத்த மழையால் ஜூன் 11ல் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த மூன்று மாடி கட்டடம் மண்ணிற்குள் புதைந்தது .பல்வேறு தங்கும் விடுதிகள் ஆபத்தான நிலையில் உள்ளன.எனவே குஞ்சுதண்ணி பகுதியில் ஆபத்தாக உள்ள 7 தங்கும் விடுதிகள் மற்றும்பள்ளிவாசல் பகுதியில் 3 தங்கும் விடுதிகள் ஆகியவற்றின்கட்டுமான பணிகளைநிறுத்துமாறு தேவிகுளம் தாசில்தார் ஷாஜி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டபோதும் விதிமீறி பணிகள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேட்டாவை அள்ளி இறைக்கும் ஜியோ!

டேட்டாவை அள்ளி இறைக்கும் ஜியோ!

ஏர்டெல்லின் சில புதிய சலுகைத் திட்டங்களுக்குப் போட்டியாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ரூ.499 விலையில் டபுள் தமாக்கா சலுகையை ஜியோ அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 3.5 ஜி.பி. டேட்டாவை ஜியோ வாடிக்கையாளர்கள் பெற முடியும். இம்மாதம் 12 முதல் 30ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மேலும் பல திட்டங்களிலும் டேட்டா சலுகைகளைப் பெற முடியும்

நெல்லை பல்கலை.யில் தமிழ் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது!

நெல்லை பல்கலை.யில் தமிழ் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது!

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ்த் துறையில் சேரும் மாணாவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அதன் துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.

பேருந்து மோதி பயங்கர விபத்து: 6 பேர் பலி

மாணவர்கள் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 6 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் அருகே உள்ள ஆக்ரா – லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் 9 மாணவர்கள் மீது பேருந்து பயங்கரமாக மோதியதில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கும் லக்னோவுக்கும் இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் சமீப காலமான அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளின் மூலம் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆக்ரா – லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி நின்று போனது.
இதனால் பேருந்தில் இருந்த மாணவர்கள், மற்றொரு பேருந்தில் இருந்து சிறிது எரிபொருள் எடுத்து அதன் மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்ல திட்டமிட்டு, பேருந்தை விட்டு கீழே இறங்கினர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து, மாணவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.