போக்குவரத்துக் கழகங்களில் இந்த ஆண்டுக்குள் 4000 பேர் ஓய்வு: பஸ் சேவை பாதிக்கும் – அரசு நடவடிக்கை எடுக்குமா?

போக்குவரத்துக் கழகங்களில் இருந்து நடப்பு ஆண்டில் சுமார் 4 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். எனவே, போதிய அளவில் ஆட்களைப் பணி அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத் துத் துறையின்கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் கணிசமான அள வுக்கு புதிய பஸ்கள் வாங்கப் படுகின்றன. இருப்பினும் பஸ்கள் முழுமையான பராமரிப்பு இல்லா மல் இயக்கப்படுகின்றன.
1985-ல் பணியில் சேர்ந்தவர்கள்
6 ஆண்டுகளை கடந்து இயக்கப் படும் அரசு பஸ்கள் அடிக்கடி பிரேக் டவுன் ஆகின்றன. பல அரசு பஸ்களின் ஜன்னல்கள் உடைந்த நிலையிலும், கதவுகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையிலும் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே, கடந்த 1985-ம் ஆண்டு போக்குவரத்துக் கழகங் களில் பணிக்கு சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 2,500 பேர் உட்பட சுமார் 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஓட்டுநர், நடத்துநர் 2,500 பேர்
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத் துக் கழகங்களில் ஆண்டுதோறும் 1,000 முதல் 1,800 ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டில் சுமார் 4 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என கணக்கிட் டுள்ளோம். இதில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மட்டுமே சுமார் 2,500 பேர் இருப்பார்கள். இது தொடர் பான அறிக்கையை தமிழக அரசிட மும் அளித்துள்ளோம். எனவே, மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், புதிய ஆட்களைத் தேர்வு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை
இது தொடர்பாக தொமுச பொரு ளாளர் கி.நடராஜன் கூறியதாவது:
போக்குவரத்துக் கழகங்களில் காலம் கடந்த பழைய பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்க ளும், ஊழியர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே, பஸ்களின் இயக்கத்துக்கு ஏற்ப ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.
போக்குவரத்துத் துறையில் ஆண்டுதோறும் சுமார் 3,000 பேர் ஓய்வு பெறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் வேண்டும்
கடந்த 2016 ஜனவரிக்கு பிறகு புதிய ஆட்களை நிர்வாகம் நியமிக்கவில்லை. எனவே, பழைய பஸ்களை நீக்கி புதிய பஸ்களை சேர்க்கவும், போதிய அளவில் பணியாளர் நியமனம் செய்யவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2016 ஜனவரிக்கு பிறகு புதிய ஆட்களை நிர்வாகம் நியமிக்கவில்லை. எனவே, பழைய பஸ்களை நீக்கி புதிய பஸ்களை சேர்க்கவும், போதிய அளவில் பணியாளர் நியமனம் செய்யவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை தினமும் பெறாவிட்டால் சஸ்பெண்ட்: காவல் ஆய்வாளர்களுக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

அனைத்து காவல் நிலையங்களி லும் காவல் ஆய்வாளர்கள் தினமும் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற வேண்டும். மீறுபவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள பெரும் பாலான காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மக்களிடம் புகார்களை வாங்காமல் அலைக் கழிப்பதாகவும், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு தீர்வுகாண சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, காவல் நிலையங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் காவல் நிலையங்களில் இருந்து பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் பற்றி முறையிட சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 11 முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 8 முதல் 9 மணிவரையும் காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.
இந்த நேரங்களில் பொது மக்கள் ஆய்வாளர்களை சந்தித்து தங்களது புகார் மனுக்களை கொடுக்கலாம். ஆய்வாளர்கள் பணியில் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை உதவி ஆய்வாளரிடம் அளிக்கலாம். பிறகு வாருங்கள் என்று பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது.
பெரும்பாலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வை நேரடியாக எனக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளேன். தேவைப்பட்டால் நானே நேரில் ஆய்வு செய்வேன். புகார் வாங்காத அல்லது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
சென்னை மாநகரை பொறுத்தவரை போக்குவரத்தை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வார்தா புயலின் போது சேதம் அடைந்த போக்கு வரத்து சிக்னல்கள் விரைவில் சீரமைக்கப்படும். சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணியில், ஆபத்து அளவு குறைந்த பிறகே அருகில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். ஆபத்தான சூழல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும்.
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும். பெற் றோர்களே இது தொடர்பாக அவர் களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பைக் ரேஸில் ஈடுபடு பவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
மெரினா கடற்கரையில் அனுமதி யின்றி போராட்டம் நடத்திய திருமுருகன்காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது விதிகளுக்கு உட்பட்டே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு மெழுகுவர்த்தி மட்டுமே ஏற்றியதுபோல சித்தரிப்பது தவறானதாகும்.
மெரினாவில் போராட்டம் நடத்து வதற்கு அனுமதி கிடையாது. போராட்டம் நடத்துவதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும். சென்னையில் ஆள் இல்லா கண்காணிப்பு விமானங்களை பறக்க விட்டாலும், டாஸ்மாக்கில் சட்டவிரோத விற்பனை குறித்து புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றார். பேட்டியின் போது கூடுதல் காவல் ஆணையர்கள் சேஷசாயி, ஜெயராம், துணை ஆணையர்கள் ராதிகா, விமலா, திருநாவுக்கரசு உடன் இருந்தனர்.

60 விவசாயிகளுக்கு ரூ.23 லட்சம் காப்பீட்டு தொகை: ஓ.எஸ். மணியன் வழங்கினார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 60 விவசாயிகளுக்கு ரூ.22 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பயிர்க் காப்பீட்டுத் தொகையினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு 2015–16 ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கும் விழா வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 60 விவசாயிகளுக்கு ரூ.22 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பயிர்க்காப்பீட்டுத் தொகையினை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:–
ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத 1 லட்சத்து ஆயிரத்து 684 விவசாயிகளுக்கு 2015–-2016 ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை ரூ.168.59 கோடி வரப் பெற்றுள்ளது.
இந்த தொகையில் இன்றைய தினம் திருமருகல் வட்டாரத்தில் உள்ள 5 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சார்ந்த 60 நபர்களுக்கு ரூ.22.34 லட்சம் மதிப்பிலான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளின் சேமிப்புக்கணக்கில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும்.
ரூ.144 கோடி விவசாய
கடன் தள்ளுபடி
மேலும் நடப்பாண்டில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம், பயிர்க்கடனாக ரூ.139 கோடி அளவிற்கு கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய சான்று பெற்று தாங்கள் அங்கத்தினர்களாக உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்து கடன் தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50,778 சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.144 கோடியே 42 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் 80% மக்கள் விவசாயம் செய்கிறார்கள். இயற்கையில் பருவகால மாற்றம் காரணமாக மழை பொய்த்து, அதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கென்று பெற்ற கடன் தொகையினை திருப்பிச் செலுத்த இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
விவசாயிகளின் இந்த துயர நிலையைப் போக்கிடவே தமிழக அரசு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்காக ரூ.55 கோடியும், சம்பா தொகுப்புத் திட்டத்திற்காக ரூ.65 கோடியும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு காலநிலைக்கு ஏற்றவாறு அவர்களது தேவையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு பயனுள்ள பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வரலாறு காணாத வறட்சியை சமாளிக்க, தமிழக அரசு நீண்டகாலத் தீர்வாக குடிமராமத்துப் பணிகளையும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் பல குடிநீர்த் திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பொது சேவை மையங்கள்
மேலும் பொதுமக்களின் வசதிக்காக தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதகை சான்று, சமூக நலத் துறையின் கீழ் திருமண உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் போன்ற அரசு சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் ஆர்.ரவி, பாத்திமா சுல்தானா, திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

36,588 விவசாயிகளுக்கு ரூ.42.45 கோடி பயிர் காப்பீடு தொகை: அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் 36,588 விவசாயிகளுக்கு ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் பயிர் காப்பீடு தொகையினை மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:–
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையினை இன்றைய தினம் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 31.3.2016 வரை 29,702 சிறு விவசாயிகளுக்கு ரூ.178.06 கோடி மதிப்பீட்டிலும், 51,231 குறு விவசாயிகளுக்கு ரூ.138.96 கோடி மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம் 80,933 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.317.02 கோடி மதிப்பீட்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 286 கூட்டுறவு சங்கங்களில் காப்பீடு செய்யப்பட்டுள்ள 129 சங்கங்களின் 19,783 கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.27.89 கோடியும், 16,805 கடன் பெறாத விவசாயிகளுக்கு ரூ.14.56 கோடியும் என ஆகமொத்தம் 36,588 விவசாயிகளுக்கு ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் பயிர்காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாய பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் உற்பத்தியினை பெருக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கடலூர் மண்டல இணைப்பதிவாளர் சொ.இளஞ்செல்வி வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் வ.சி.கோமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தனராஜா, கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் ஆர்.வி.பெருமாள் ராஜா மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சிதம்பரம் துணைப்பதிவாளர் க.ஜெகன்மோகன் நன்றி கூறினார்.

மட்கும் குப்பை, மட்காத குப்பையை பிரித்து வழங்குங்கள்: மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

சுற்றுப்புற சுகாதாரத்தினை மேம்படுத்திட பொதுமக்கள் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பிரித்து வழங்கிட வேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (5–ந் தேதி) அம்மா மாளிகையில் மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தின உறுதிமொழியினை ஏற்று, 25 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ.24,360 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.6,09,000 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டிகளையும், பொதுமக்களுக்கு மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை பிரிப்பதற்காக ரூ.16.20 லட்சம் மதிப்பீட்டிலான 13,500 பச்சை மற்றும் 13,500 நீல நிறக் கூடைகளையும் வழங்கினார். சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்திட பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாக பிரித்து பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில் தெரிவித்ததாவது:– அண்ணா தி.மு.க.
ஆட்சியில் சாதனை
அம்மாவின் பொற்கால ஆட்சியில், கடந்த 5 ஆண்டு காலத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளிட்ட ஊரகப்பகுதிகள் ஆகியவற்றில் மொத்தம் 1,807 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டு காலத்தில், 303 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மட்டுமே, திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திமுக ஆட்சிக் காலத்தை விட, அம்மாவின் ஆட்சியில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு 1,504 கோடியே 40 லட்சம் ரூபாய், அதிகமாக செலவிடப்பட்டு, மகத்தான சாதனை படைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு 5,400 மெட்ரிக் டன் குப்பையும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7,597 மெட்ரிக் டன் குப்பையும், பேரூராட்சிப் பகுதிகளில் 1,967 மெட்ரிக் டன் குப்பையும், ஊரகப் பகுதிகளில் 2,340 மெட்ரிக் டன் குப்பையும், என தமிழகம் முழுவதும் மொத்தம் 17,304 மெட்ரிக் டன் குப்பைகள் தினசரி சேகரிக்கப்படுகின்றன. 2016-–17–ம் ஆண்டில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மீதமுள்ள 3,524 கிராம ஊராட்சிகளிலும் ‘தூய்மை காவலர்களை’ ஈடுபடுத்தி திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அம்மாவின் பொற்கால ஆட்சியில், ஊராட்சிப் பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும், பிரிக்கவும், அவற்றை குப்பை கிடங்குகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக, அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளிலும், 65,988 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
66 ஆயிரம் பேர்
தூய்மைக்காவலர்கள்
சேகரிக்கும் குப்பைகளை எளிதாக அப்புறப்படுத்தும் பொருட்டு, 22,704 மூன்று சக்கர மிதிவண்டிகள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், 65,988 பணியாளர்களை ‘தூய்மைக் காவலர்களாக’ தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.
இந்த முயற்சியால், மாநிலத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகளும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்புறச் சூழல்தினத்தன்று, தூய்மை இந்தியா திட்டம் மற்றும் தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 12 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இதுவரை 2,097 பணிகளுக்கு 969 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4 இடங்களில் குப்பையிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள்
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில், புளியந்தோப்பு, ஓட்டேரி, வேலங்காடு, அத்திப்பட்டு ஆகிய நான்கு இடங்களில், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளும், குப்பையிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் 2 நிலையங்களும் அமைக்கப்பட்டு, அம்மா உணவகங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 141 இடங்களில், நாள் ஒன்றுக்கு 104 டன் மட்கும் குப்பையிலிருந்து, உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில், தூய்மையான திருநெல்வேலி திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல்லாவரம், தாம்பரம் மற்றும் 32 நகராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வாங்கி, மட்காத குப்பையின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்து, மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் 466 பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வீடுகளுக்கு சென்று மட்கும் குப்பை மட்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது.
மட்கும் குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என கேட்டுக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ், மத்திய சென்னை பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, தென் சென்னை பாரளுமன்ற உறுப்பினர் டி.ஜெ.ஜெயவர்தன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி, தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்திய நாரயணன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்ஸாண்டர், மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

82 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை: எடப்பாடி வழங்கினார்

பள்ளி கல்வித்துறையில் 82 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில் 25 சதவிகித பணியிடங்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ் கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டு உயிரிழந்த ஊழியர், ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 2016–-17–ம் ஆண்டிற்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிர்ணயம் செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களை கருணை அடிப்படையில் நிரப்பிட அரசாணை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (5–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் ஆர். இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர் எஸ். கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக சட்டசபை 14–ந் தேதி கூடுகிறது

தமிழக சட்டசபை இம்மாதம் 14–ம் தேதி (புதன்கிழமை) கூடுகிறது என சட்டசபை பொறுப்புச் செயலர் பூபதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை செயலாளர் பொறுப்பு வகிக்கும் க. பூபதி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கவர்னர் இந்திய அரசமைப்புப் பிரிவு 174, உட்பிரிவு 1–ன்கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை வரும் 14ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 1 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று ஒவ்வொரு துறையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யவும், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1–ம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அண்ணா தி.மு.க.வில் எழுந்த பிரச்சினைகளால் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித்துறை இருந்தது. கடந்த 23ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு, மார்ச் 16ம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபையில், 2017––2018ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20–ம் தேதி முதல் 24–ம் தேதி வரை நடைபெற்றது. ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தல் வந்ததால் அன்றே சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் சட்டசபை மீண்டும் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டசபை கூட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது. சட்டசபை நடத்துவதற்கு புதிதாக கவர்னர் உத்தரவு பிறப்பித்தால் தான் முடியும்.
இந்நிலையில், வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது என கவர்னர் உத்தரவிட்டிருப்பதாக சட்டசபை செயலர் பூபதி அறிவித்துள்ளார்.

லண்டன் தாக்குதல்: நகர மேயரை சாடியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டன் தாக்குதலையடுத்து மற்ற இடங்களை பாதுகாப்பதில் அலட்சியமாக இருப்பதாக லண்டன் மேயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியுள்ளார்.
லண்டன் தாக்குதலையடுத்து மற்ற இடங்களை பாதுகாப்பதில் அலட்சியமாக இருப்பதாக லண்டன் மேயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியுள்ளார்.
லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது.
இதனையடுத்து, லண்டன் நகர மேயர் சாதிக் கான், “மற்ற இடங்களுக்கு எச்சரிக்கை விட வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்,” குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் காயமடந்துள்ளனர். ஆனால், லண்டன் மேயர் எச்சரிக்கை விடவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறார்” என டுவீட் செய்திருந்தார்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.
மல்லையா மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தும் மல்லையா இன்றும் அவ்வாறு செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியை மல்லையா நேரில் சென்று பார்த்துள்ளார். வெள்ளை கோட் அணிந்து பார்வையாளர்கள் கேலரியில் அவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் பரவி வருகின்றது.

மக்களுக்காக, நான் செயல்படுவதை நாராயணசாமி விரும்பவில்லை: கிரண்பேடி குற்றச்சாட்டு

நீதி கிடைக்காமல் கண்ணீர் வடிக்கும் மக்களுக்காக, நான் செயல்படுவதை நாராயணசாமி விரும்பவில்லை என்று கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக கவர்னர் தலையிட்டதால், அதற்கு நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கவர்னர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளம் ஒன்றில் கவர்னர் கிரண்பேடி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான் ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டுமா? அல்லது பொறுப்புள்ள நிர்வாகியாக செயல்பட வேண்டுமா? இதில் முதல்- அமைச்சர் என்ன விரும்புகிறார்? இது தான் இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது.
சில தவறுகள் நடக்கிறது. மக்கள் நீதி கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி இருக்க கவர்னர் எல்லா கோப்புகளிலும் எந்த விளக்கங்களும் கேட்காமல் அனுமதி கொடுக்க முடியுமா? மக்களின் நன்மைக்கு எதிராக நடப்பதை தடுக்க கூடாதா?
எதையும் பார்க்க கூடாது, வெறும் பார்வையாளராக இருக்க வேண்டும், சும்மா பொழுதை போக்க வேண்டும், கவர்னர் மாளிகையில் உள்ள எல்லா வசதிகளையும் நான் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இப்படித்தான் நான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்களா?
என்னை தனிமைப்படுத்த வேண்டும், மக்களை சந்திக்க கூடாது? அதிகாரிகளிடம் கேள்வி கேட்கக் கூடாது, எதிலும் தலையிடக்கூடாது, அவர் சொல்வதை மட்டும் நான் கேட்க வேண்டும், என நினைக்கிறார்கள். இதற்காக பல கடிதங்களை அவர் எனக்கு எழுதுகிறார்.
நான் மத்திய அரசிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்று தரவேண்டும் என்று முதல்-அமைச்சர் விரும்புகிறார்? ஆனால் கிடைக்கிற பணத்தை முறையாக செலவிடவில்லை? சுற்றுலா போன்றவற்றில் உரிய வருமானம் ஈட்டவில்லை.
புதுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவருக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நடைமுறையில் எதிலும் சிறப்பாக செயல்பாடுகள் இல்லை.
முதல்-அமைச்சருக்கு என்ன பொறுப்பு உள்ளது, கவர்னருக்கு என பொறுப்பு உள்ளது என்பது பற்றி யூனியன் பிரதேச சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் முதல்- அமைச்சர் அதை படித்தாரா? அல்லது படிக்க வில்லையா? அல்லது படித்து விட்டு புறக்கணிக்கிறாரா?
தற்போது புதுவையில் என்ன சூழ்நிலை நிலவுகிறது? என்பதை சந்திக்க அவர் விரும்பவில்லை? மக்கள் நீதி கிடைக்காமல் கண்ணீர் வடிக்கிறார்கள். மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுப்படி மாணவர்களுக்கு உரிய இடம் கிடைக்காமல் மாணவர்களும், பெற்றோர்களும் அழுகிறார்கள்.
மக்கள் அழுவதை இங்கு யார் கேட்கிறார்கள்? கோர்ட்டும் இங்கிருந்து வெகுதூரத்தில் சென்னையில் உள்ளது.
எனவே தான் மக்கள் கடைசி நம்பிக்கையாக கவர்னர் மாளிகையை நோக்கி வருகிறார்கள். எப்போதும் அவர்களுக்காக கவர்னர் மாளிகை திறந்து உள்ளது.
புதுவையில் இப்போது நீதி, நேர்மை சிறந்த அரசாங்கம் தேவைப்படுகிறது.
அதை மக்கள் எப்படி பெறுவார்கள்? யார் அவர்களுக்கு வழங்குவார்கள்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காமல் சிலருக்காவது அவர்களுக்காக துடிக்கும் இதயம் வேண்டும். சுயநலம் இல்லாமல் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களுக்காக பணியாற்ற ஒருவர் வேண்டும்.
இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.