இந்தியாவில் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என்று சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக கடந்த 31-ந் தேதி இரவு ரஷியாவுக்கு சென்றார். அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு’ கூட்டம் நடைபெற்றது. அதில், ரஷிய அதிபருடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அந்த அமைப்பின் கூட்டத்தில் இந்திய பிரதமர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.

சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் வானமே எல்லை. தொழில் செய்வதற்காக, நீங்கள் விரும்பிய எந்த பகுதிக்கும் செல்லலாம். ஆகவே, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவின் 120 கோடி மக்களும் உங்களை அழைக்கிறார்கள். உலகின் பழமையான நாகரிகம் உங்களை அழைக்கிறது.

வளரும் இந்தியாவை நோக்கிய எனது அரசின் பயணம், உள்கட்டமைப்பு, வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய துறைகளின் முதலீடு மீது கட்டப்பட்டது. 50 நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டமும், 500 நகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் வசதிகளும் தேவைப்படுகின்றன.

அத்துடன், உலகின் இரண்டாவது பெரிய ரெயில்வே நெட்வொர்க் வசதி, இந்தியாவில்தான் உள்ளது. அதை பாதுகாப்பானதாக, நம்பகமானதாக தரம் உயர்த்த வேண்டும். தூய்மை இந்தியா திட்டப்படி, 2 ஆயிரத்து 500 கி.மீ. நீள கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டி உள்ளது. இவை அனைத்தும் முதலீட்டுக்கு அதிக வாய்ப்பை அளிக்கின்றன.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, சுற்றுலா, உணவகங்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி போன்ற துறைகளிலும் இந்தியாவில் நல்ல வாய்ப்பு உள்ளது.

பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு பொறுப்பான நாடு. இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும், சுரண்டக்கூடாது. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் வருவதற்கு முன்பிருந்தே சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா பாடுபட்டு வருகிறது.

எனவே, பாரீஸ் ஒப்பந்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்கால தலைமுறைக்காக பருவநிலையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில் கூறியதாவது:-

பயங்கரவாதம், மனித இனத்தின் எதிரி. எனவே, நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என்ற விவாதத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி, ஆயுதம், தொலைத்தொடர்பு வசதி ஆகியவை கிடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு மோடி கூறினார்.

கருணாநிதிக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

இன்று 94-வது பிறந்த நாள் காணும் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் எம்.ஹமீது அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறந்த நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “94-வது பிறந்த நாள் காணும் தங்களுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு பணியாற்ற பிரார்த்தனை செய்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “சமூக பொருளாதார சீர்திருத்தங்களிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவதிலும் கருணாநிதி முக்கிய பங்காற்றியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் சொந்த மாநிலத்தில் சில முக்கிய பணிகள் உள்ளதால் பிறந்தநாள் விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர் கருணாநிதி: ஜி.கே.வாசன் வாழ்த்து

தமிழக முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றிய கருணாநிதி தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு வாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து தமிழகத்தின் தலைநகருக்கு வந்து பெரியாரின் தத்துவங்களை உள்வாங்கி, அண்ணாவிடம் அரசியல் பயின்று சாதனை படைத்தவர் கருணாநிதி.

தமிழக முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், தேசிய தலைவர்களாலும் மதிக்கப்படுபவர். படிப்பது, இலக்கியம் படைப்பது, எழுதுவது, பேசுவது என இடைவிடாமல் மக்களுக்காக அவர் உழைத்துக் கொண்டே இருப்பவர். இலக்கியம், கலை, சமுதாயம், அரசியல் ஆகிய நான்கு தளங்களிலும் முத்திரைப் பதித்தவர் கருணாநிதி மட்டுமே.

தன்னம்பிக்கை, தளராத உழைப்பு, தோல்வி கண்டு துவளாமை, என்றும் துளிர்க்கும் போராட்ட உணர்வு ஆகியவையே அவரது வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைந்தன. சட்டப்பேரவையில் கன்னிப் பேச்சிலேயே பேரவைத் தலைவரை கவர்ந்தவர். நல்ல பேச்சு என பாராட்டையும் பெற்றவர்.

சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் என்பது எவரும் எட்ட முடியாத சிகரம். சாதாரண மனிதராக வாழ்வைத் தொடங்கி, சாதனை நாயகராக உயர்ந்து நிற்கும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் சீரிய பணிகள் தொடர வேண்டும். வைர விழா நாயகரே, வாழ்க நூற்றாண்டு என வாழ்த்துகிறேன்” என்று வாசன் தெரிவித்துள்ளார்.

குட்வில் காம்டிரேட்ஸ் நிறுவனத்துக்கு விருது

குட்வில் காம்டிரேட்ஸ் நிறுவனத்துக்கு ‘2016-17-ம் ஆண்டுக்கான சிறந்த சரக்கு தரகு நிறுவன விருது’ மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் (எம்சிஎக்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

குட்வில் காம்டிரேட்ஸ் (பழைய பெயர் குட்வில் கமாடிட்டிஸ்) நிறுவனம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 70 அலுவலகங்களை அமைத்து 80 ஆயிரம் வாடிக்கை யாளர்களுக்கு வர்த்தகம் மற்றும் நிதி தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. தினமும் சராசரியாக ரூ.1500 கோடி அளவுக்கு இதன் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது.

குட்வில் காம்டிரேட்ஸ் நிறுவனம் 2016-17-ம் ஆண்டுக்கான சிறந்த சரக்கு தரகு நிறுவனமாக இந்திய பல்பொருள் பரிமாற்ற நிறுவனத்தால் (எம்சிஎக்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது. குட்வில் காம்டி ரேட்ஸ் நிறுவனத்துக்கு விருது கிடைத் ததை கொண்டாடும் கூட்டம் தி.நகர், தி ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற் றது. எம்சிஎக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.ஜி.செந்தில் வேலன் சிறப்பு விருந் தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குட்வில் குழும தலைமை செயல் அதிகாரி ஆர்.பாஸ்கரன், துணைத் தலைவர் சரவணாபவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாடு முழுவதிலுமிருந்து குட்வில் குழும அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. மும்பையிலிருந்து செயல்படும் எம்சிஎக்ஸ் நிறுவனம் தங்கம் வெள்ளி, இரும்பு அல்லாத உலோகங்கள், எரிசக்தி, விவசாய விளைபொருட்கள் பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வரு கிறது. எம்சிஎக்ஸ் நிறுவனம் ‘செபி’ விதி முறைகளின் கீழ் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 1,323 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் களுக்கு இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் ஆணை வழங்க பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தர விட்டுள்ளார். அதன்படி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்கள்), உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) ஆகியோருக்கு மே 31, ஜூன் 1 ஆகிய நாட்களில் ஆன்லைனில் வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதன்மூலம் 1,323 ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் தாங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.

இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே பலரும் நேரிலும், போனிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவாறு இருந்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தமிழிசை சவுந்தரராஜனையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து, தமிழிசை சவுந்தரராஜன் தனது வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிந்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரிக்கின்றனர். மிரட்டலைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தமிழிசை வீட்டைச் சுற்றி ரோந்து வருகின்றனர்.

சென்னையில் 2 நாள் நிகழ்ச்சிகள்: ஸ்டாலின் வீட்டில் ராகுல் காந்திக்கு இன்று தேநீர் விருந்து

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்னை வரும் ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் தேநீர் விருந்தளிக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். மாலை 4.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து நேராக கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடைபெறும் ஒய்எம்சிஏ மைதானத்துக்குச் செல்கிறார். விழா முடிந்ததும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். நாளை (ஜூன் 4) காலை 10 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்பி., எம்எல்ஏ.க்கள் கூட் டத்தில் பங்கேற்கிறார். பின்னர், பகல் 1 மணியளவில் சென்னை யிலிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்ல இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: ஜூன் 22-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கு விண் ணப்பம் சமர்ப்பிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்படும்.

தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. ஒன் றரை லட்சத்துக்கும் மேற்பட் டோர் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளனர். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப் பத்துடன் தேவையான ஆவணங் களை இணைத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்துவிட வேண்டும்.

27 முதல் கலந்தாய்வு

ஏற்கெனவே அண்ணா பல் கலைக்கழகம் அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து, 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 27-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும்.

 

ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம்

சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேறவேண்டியதுதான் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

28 சதவீதமாக அறிவிக்கப் பட்டுள்ள சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை 12 முதல் 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எல்.சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் பேசியதாவது:

ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக இந்திய சினிமாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்திருப்பது சரியானதல்ல. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்.

ஆனால், உலகளாவிய ரசிகர் களை கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்தி படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரி யல்ல. பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதி யில் வசித்தாலும், அவர்களது எண் ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டு களுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது. ஆனால் உலக அளவில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சினிமாவை சூதாட்டமாக யாரும் கருத வேண்டாம். அதை கலையாகப் பார்க்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுடன் உரையாடல் நடைபெற்று வருகிறது. யாரால் எது சாத்தியம் என்பதை அரசு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். சினிமாவை தனியாகப் பிரித்து பார்க்க வேண்டாம். இந்த வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்கவும் வழியில்லாத நிலை உருவாகும். என் மழலை மொழி மாறியதே இந்த சினிமாவில்தான். இதுதான் என் வாழ்க்கை. நாம் தொழில் பண்ண வேண்டும். சினிமா துறை மீதான இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேற வேண்டியதுதான். ஆகவே, அரசு இதை புரிந்துகொண்டு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இந்தி சினிமாவுக்கு இணையாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது: கமல்ஹாசன்

 

இந்தி மொழி படங்களுக்கு இணையாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்திய வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் திரைத்துறைக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசிய கமல்ஹாசன் “ சினிமா என்பது கலை அது சூதாட்டம் அல்ல, புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று.

இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28 % வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது. மேலும் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு ஒற்றை கலாச்சாரம் பழக்க வழக்கம் ஆகியவற்றை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்.

இது போன்ற நடவடிக்கைகள் அங்கு தான் இட்டுச் செல்லும் பிராந்திய மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும் “ என்றார் கமல்ஹாசன்